Tuesday 19 May 2015

அரசு விளம்பரங்கள் இனி யாரை முன்னிறுத்தும்?





சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து  நகரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்ததும் அதில் அமர்ந்திருந்த மூதாட்டி கண்களை சோர்வுடன் மூடிக்கொண்டார். அவரது கருணைமிகுந்த முகத்தின் சுருக்கங்களில் உலகத்துத் துன்பங்கள் எல்லாம் புதைந்திருந்தது போல இருந்தது. அந்த சின்ன மெலிந்த வற்றிய உடம்பை எளிய வெள்ளை பருத்திச் சீலை சுற்றியிருக்க மெல்லிய உதடுகள் ஏதோ பிரார்த்தனையை முணுமுணுத்தபடி இருந்தது.  அரசின் வி ஐ பி விருந்தினரை அழைத்துசெல்ல வந்திருந்த பெண் அதிகாரி அந்த மூதாட்டியுடன் பேசவேண்டும் என்ற தனது அதீத ஆவலை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். பேசாமல் இருப்பதும் ஒரு விதத்தில் நல்லதுதான். அன்று  கவலைப்பட வேறு விஷயங்கள் இருந்தன. விருந்தினரை விருந்தினர் மாளிகையில் இறக்கி விட்டதும் கவனிக்கவேண்டிய பணிகள் ஏராளமாக இருந்தன.
திடீரென்று மூதாட்டி கண்களைத்திறந்து ஜன்னல் வழியே பார்வையை ஓட்டினார். கண்களை வியப்புடன் மலர்த்தி, ‘அதெல்லாம் என்ன டியர்?’ என்றார்.
, அவை cut-outs மதர்என்றார் அதிகாரி. எங்கள் முதல்வரின் கட் அவுட்டுகள்.
மதர் தெரெஸா கழுத்தை வளைத்து ஆகாசத்தைப்பார்த்தார். முதல்வரின் தலை மேகத்தில் மறைந்திருந்தது.
கடவுளே!என்றார் மதர் தெரஸா அதிர்ச்சியுடன். எத்தனை பெரிசு!
நீங்கள் இந்த மாதிரி பார்த்ததில்லையா?’
சாலை நெடுகிலும் அணிவகுத்திருந்த கட் அவுட்டுகளை பார்த்தபடி மதர் சொன்னார். உலகத்தில் எங்குமே பார்த்ததில்லை.
அதான் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் இவை இல்லாவிட்டால்தான் மக்களுக்கு வியப்பாக இருக்கும் இது இங்கு மிக சாதாரணம், சினிமா விளம்பரமோ , அரசியல் தலைவர்களுக்கு தெரிவிக்கும் மரியாதையோ  கட் அவுட் வைக்கும் கலாச்சாரம் . கட் அவுட்டின் அளவும் மிக முக்கியம் . உங்கள் தலைவருக்கு நீங்கள் காண்பிக்கும் விசுவாசதின் அளவுகோலாக அது பார்க்கப்படும்.அதிகாரி சிரித்துக்கொண்டே சொன்னார்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மதர் கேட்டார் -ஒவ்வொரு கட் அவுட்டுக்கும் எத்தனை செலவாகும்?”
எனக்குத் தெரியாதுஎன்றார் அதிகாரி ஏமாற்றத்துடன்.  “ சில ஆயிரம் ரூபாய் ஆகலாம். ஆனால் தலைவிக்குத் தனது விசுவாசத்தைக் காண்பிக்க தொண்டனுக்கு எந்தச் செலவும் பெரிசில்லை!மதரின் முகத்தில் இருந்த அதிர்ச்சி மறையவில்லை. ஒரு கட் அவுட் செலவில் எத்தனை ஏழைகளுக்கு சாப்பாடு போடலாம்?’ என்று அவர் முணுமுணுத்ததைக்கேட்டு அதிகாரிக்குக் கவலை ஏற்பட்டது. அன்று மிகப் பெரிய விழாவிற்கான ஏற்பாடு பல லட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடாகி இருந்தது. ஜெயலலிதாவின் “ Vision 2000” - பெண்கள் முன்னேற்றத்திற்கான முதல்வரின் தொலைதூர பார்வைகொண்ட  [ இன்னும் ஐந்தாண்டு இருந்தன 2000 த்துக்கு] திட்ட அறிவிப்பு மதர் தெரஸாவினால் தொடங்கப்படவேண்டியிருந்தது. அரங்கத்தில்   இதெல்லாம் தண்டச்செலவு என்று இந்த மூதாட்டி கடுப்பு தெரிவித்தால் என்ன செய்வது? நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. உலக ஞானம் மிக்கவரான மதர் முதல்வரின் செயலை கட்வுட் அளவுக்கு மேல் புகழ்ந்து எல்லோர்  மனத்தையும் குளிர்வித்தார்.  ஊர் திரும்ப விமான நிலையத்துக்குப் பயணித்தபோது வெளியில் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டார்.
முதல்வர்களின் புகைப்படங்களை  மாநிலங்கள் அரசு விளம்பரங்களில் இனி உபயோகிக்ககூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.  கட் அவுட்டுகளைப்பற்றி சொல்லாமல் விட்டது தமிழக அரசியல் கட்சிகளுக்கு நிம்மதி என்றாலும்  ஆளும் அரசு பரிதவித்துப்போகும் என்பதில் சந்தேகமில்லை. அங்கிங்கென்னாதபடி அரசின் சகல விளம்பரங்களிலும், பால்பைகள், ரேஷன் பைகள், நீர் பாட்டில்கள் , பேருந்துகள் கட்சித்தொண்டர்களின் மஸ்லின் சட்டைப்பாக்கெட்டுகள் , பெண்டெண்ட்டுகள் என்று  சகட்டு மேனிக்கு ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு அலங்கரித்துத் தங்கள் விசுவாசத்தைப் பறைசாற்றிக்கொண்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அடிப்படைத் தொண்டர்கள் இனி என்ன செய்வார்கள்? அப்படித் தலைவர்களின் படத்தை அரசு விளம்பரங்களில் போடுவது, பொது மக்களின் வரிப்பணத்தை விரயம் செவது மட்டுமல்லாமல், ஆபத்தான் தனிநபர் வழிபாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் செயல் என்கிறது உச்சநீதிமன்றம். அடேயப்பா, இப்போதுதான் புரிந்ததா? எங்களூரில் அது இல்லாமல் அரசியல் செய்யவே முடியாது  என்பது உங்களுக்குத் தெரியாது. அதுதான் வண்ணமூட்டுவது. சுவாரஸ்யமற்ற அரசியல் அரங்கை பளபளப்பூட்டி மயக்கத்தைத்தருவது,.
அந்த அதிகாரி சரியாகத்தான் சொன்னார். தனி நபர் ஆராதனை தமிழர்களின் கலாச்சாரம். நமது ரத்தத்தில் ஊறிப்போன நிலப்ரபுத்துவ மரபு. நமக்கு யாரையாவது ஆராதித்தே பழக்கம்.அமைச்சர்கள் தலைவியின் காலில் விழுவார்கள். அரியாசனம் கிடைத்தாலும் தலைவி அமர்ந்த இடத்தில் அமர்வது அபச்சாரம் என்று காட்டுக்குச் சென்ற ராமன் திரும்பும்வரை காத்திருந்த பரதன்போல் காத்திருக்கும் அதிசய விசுவாசிகளைப்பற்றி மதர் தெரஸாவுக்குப் புரியக்கூடப் புரியாது. கடவுளோ  ஆண்டானோ நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தே  நமக்கு வழக்கம். அதை நிர்மூலமாக்கும்விதமாக வேறு எந்த மாநிலத்திலும் தோன்றாத  சுமரியாதை இயக்கம் என்ற  ஒரு சமூகப் புரட்சி இங்கு தோன்றியது மாபெரும் அதிசயம். அது ஒரு அதிசய மனிதரால் சாத்தியமாயிற்று. ஆனால் புரட்சிப்பிரச்சாரத்தின்போது பெரியார் சொல்லத் தவறவில்லை. நான் சொல்வதைக் கண்ணைமூடிக்கொண்டு நம்பாதீர்கள் .சுயமாக யோசித்து முடிவுக்குவாருங்கள்.பெரியாரின் வழித்தோன்றல்களுக்குத் தெரியும், ஒரு அரசியல் கட்சியை நடத்தும்போது தொண்டர்களுக்கு அத்தகைய சலுகைகள் இருக்கமுடியாது என்று. கட்சிக்கு ஒரு தலைவரோ தலைவியோ கண்டிப்பாகத் தேவை. அவரது தலைமைக்கு எந்த சவாலும் இல்லாத பலத்தோடு. ஜனநாயக போர்வை போர்த்தினாலும்  தலைமையின் சொல்லுக்கு மறுமொழி இருக்கக்கூடாது.  வெகுஜன மக்களை ஈர்க்கும்  யுக்தி அது.அவர்களுக்கு அத்தகைய பிம்பம்தான் பாதுகாப்பு உணர்வைத் தரும். ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே இருந்த தூரம் மக்களுக்கும் தலைவருக்கும் இடையே ஏற்டுவது தவிர்க்கமுடியாதது. இது உலகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்ட விஷயம். தலைவரின் பண்புகள் பிரமிப்பையும் பயபக்தியையும் விளைவிக்கும் விதத்தில் தலைமையின் பலம் மிகைப்படுத்தப்படவேண்டும்.அளவுக்கு அதிகமாக ஊதிப்பெருக்கப்படவேண்டும். இலவசங்கள் அரசு   செலவில் அளிக்கப்பட்டாலும் வாங்கிக்கொண்டவரின் இதயத்திலும் இல்லத்திலும் என்றென்றும் வீற்றிருக்கும்படி முதல்வரின் படம் அதில் பொறித்திருக்கவேண்டும். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் மடிக்கணினியில் முதல்வரின் படம் இருப்பது எத்தனை அற்புதமான யுக்தி! ஆயுளுக்கும் அந்த மாணவ மாணவியர் விசுவாசமாக இருப்பார்களே. உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று நம்பும் மக்களுக்கு அம்மா உணவகத்துச்சோறு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும். கட்சித் தலைமையை ஆராதிக்கும் பணியில் தமிழரை யாரும் மிஞ்சமுடியாது.
கடவுளின் உன்னதத்தை விளக்கும் வகையில் கோவில் கோபுரங்கள் எழுப்பப்பட்டன. வானளாவ உயர்ந்து நிற்கும் கட் அவுட்டுகள் தலைவரின் மகத்துவத்தை விளக்கும். பழைய கடவுள்களின் இடத்தைத் தலைவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். பெரியார் அதைப்பார்ந்து நொந்துபோகமாட்டார்? அவரையும் கடவுளாக்கிவிட்டால் போகிறது. ரோஜா வண்ணக் கன்னங்களுடன் பெரியாரை கட் அவுட்டில் வரைந்து வானுக்கு உயர்த்திவிட்டால் போகிறது. திமுக அதிமுக இரு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திலும் அவருக்கு இடமுண்டு. இரு கட்சிகளுக்கும் அவர்தானே சூத்ரதாரி?

உச்சநீதிமன்ற உத்தரவுகண்டு இப்போது அமைச்சர்கள் குழம்பிப்போவார்கள். கட் அவுட்டகளின் தாக்கத்தைவிட அவர்களின் அரசுவிளம்பரங்கள் தலைமையின் மகத்துவத்தைக்கொண்டாடும் அதிகபட்ச வலுவான ஆயுதமாக இருந்துவந்திருக்கிறது. அதெப்படி முதல்வரின் புகைப்படத்தைப் போடாமல் அரசு விளம்பரங்களைத் தயாரிப்பது. ஒரு கார்டில்  கடிதம் எழுதும் முன்புகூட பிள்ளையார்  சுழி போட்டு பழக்கம். அதுபோல முதல்வரின் படம் ஒரு பிள்ளையார் சுழி. அது இல்லாமல் எப்படி எந்த வேலையையும் துவங்குவது?
     

Friday 15 May 2015

அந்த நாள் வந்திடாதோ ?







 பெங்களூரில் இன்னும் இருள் பிரியாத நேரம். காலை ஏழு மணிக்கு எங்கள் அடுக்கு மாடிகட்டிட வளாகத்தின் கேட்டுக்கு வெளியே நிற்கிறது ஒரு பள்ளி பஸ். ஓட்டுனர் பொறுமை இழந்து இரண்டு முறை ஹார்ன் அடிக்கையில் இரு சிறுவர் சிறுமியர் அவர்களது தாய்மார்கள் பின்தொடர ஓடுகிறார்கள். தாய்களின் கையில் பாதி ப்ரெட் துண்டு. அல்லது ஒரு அரை கோப்பை பால்அவர்களது கெஞ்சல் ஓய்வதற்குள் சிறுவர்கள் வண்டியில் ஏறிவிட்டார்கள் கனத்த பைகள் முதுகைமுன்னுக்கு வளைத்து முகம் அதில் மறைந்து...
பள்ளிக்குச் செல்லும் இன்றைய சிறுமிகளையும் சிறார்களையும் கண்டால் எனக்குக் காரணம் புரியாமல் வயிற்றைக் கலக்குகிறது. இந்தப் பொதிச் சுமையும் அரை வயிற்று ஓட்டமும் மாலை களைத்துவந்ததும் ஹோம்வர்க்கும், களைப்பைப்போக்க கம்ப்யூட்டர் கேம்சும்.... பறவைகளின் கீதத்தை கேட்கப் போதில்லை. பெங்களூர் மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை அண்ணாந்து பார்க்க முதுகு நிமிராது...

ஐம்பது அறுபது ஆண்டுக்கு முந்தைய  பெங்களூரில் எனது பள்ளி நாட்களை நினைக்கும்போதே  மனசு பொங்குகிறது உவகையில். எத்தனை ரம்யமான சந்தோஷமான வருடங்கள் அவை!எங்கள் பைகள் கனத்ததில்லை. முதுகு கூனவில்லை. காலை உணவு முடித்தபிறகு சௌகர்யமாக ஸ்கூல் பஸ் வரும் எட்டரை மணிக்கு. வழி அனுப்ப கவலைத் தோய்ந்த முகத்துடன் எவரும் நிற்கமாட்டார்கள்வீட்டில் வானொலி பெட்டிகூட இல்லாத காலம். தொலை பேசியா? கேள்விபட்டதுகூட இல்லைவீடு நிறைய புத்தகங்கள் . தாத்தா ஒரு ஆங்கில ஆசிரியர். ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். காந்தியவாதி. வாயைத் திறந்தால் ஆங்கில இலக்கியமோ தீவிர அரசியல் பேச்சோ இருக்கும். அரசியல் ஆர்வமும் ஆங்கில மொழியின் ஈர்ப்பும் எனது உதிரத்தில் கலந்திருந்தது. ஆங்கில மொழிவழி பள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன். கான்வெண்ட் பள்ளி இல்லைMadras Presidency யைச் சேர்ந்த இந்து பள்ளி. திருவேங்கடசாமி முதலியார் என்ற பெருந்தகை தனது மனைவி பேரில் கட்டியிருந்த மாபெரும் பள்ளி . ஆரம்ப பள்ளியிலிருந்து உயர்நிலைபள்ளி முடிய. பெங்களூரின் தண்ணென்ற சூழலில் மரங்களும் பூச்செடிகள் நிறைந்த பூங்காவுடனான இரண்டு பிரும்மாண்ட கல் கட்டிடங்கள் எதிரும் புதிருமாக. இரண்டுக்கும் இடையே, மிக விசாலமான  ஏற்றமும் இறக்கமுமாக பூங்கா. ஒரு சினிமா செட்டைப்போல இருக்கும். பலதரப்பட்ட, பல மொழி பேசும் மாணவியர். தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, உருது, கொங்கணி, கூர்கி மலையாளம் என்று. ஆகையாலேயே ஆங்கிலமே எங்களது பேச்சு மொழியானது. அது மிக இயல்பாக வந்தது .
படிப்பு என்பதை ஒரு சுமையாக கலக்கத்துடன் நாங்கள் அணுகிய பேச்சே இல்லைமிஸ் டேவிட், மிஸ் எட்வர்ட்ஸ், மிஸ் லீலா மிஸ் லக்ஷ்மி என்று உற்சாகமாக பாடம் நடத்தும் ஆசிரியைகள். மிஸ்.டேவிட் எங்களுக்கு மண்ணை நேசிக்கக் கற்றுக்கொடுத்தார். தோட்டம் போட என்று நேரம் உண்டு. எங்கள் வகுப்புக்கு என்று ஒரு சதுரமான இடம் இருந்தது. மண்ணைக்கிளறவும் பாத்தி கட்டவும் அளவாக நீர் ஊற்றவும் கற்றுகொண்டோம். மண்ணிலிருந்து சுருண்டு நெளிந்து வரும் மண் புழுக்கள் நமது சினேகிதர்கள் என்று புரிந்துகொண்டோம். மிஸ் டேவிட் சொல்வதெல்லாம் எங்களுக்கு வேதவாக்கு. விதையிலிருந்து செடி முளைத்து இலை துளிர்விடும்போது எங்களுக்கு ஏற்படும் பரவசம் மிஸ்.டேவிட்டுக்கும் ஏற்படும்.ஆங்கிலத்தில் ரசனை ஏற்படுத்தியது மிஸ்.டேவிட். வோர்ட்ஸ்வோர்த்தின் The Daffodils ஸை மிஸ் டேவிட் படிக்கும்போது நாங்கள்  அவருடன் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டிருப்போம். மற்றவரை புண்படுத்தாமல் பேசச் சொல்லிக்கொடுத்தது மிஸ்.டேவிட். எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யச் சொல்லிக்கொடுத்தது மிஸ் டேவிட்...
அங்கு தமிழை இரண்டாம் மொழியாக எடுக்கும் வசதியும் இருந்தது. அதனாலேயே மதுரையைச் சேர்ந்த என் தந்தையின் யோசனையின் பேரில் அந்தப்பள்ளியில் நான் சேர்க்கப்பட்டேன். தமிழ் பற்று என்னை சிக்கென்று பிடித்துக்கொள்ளவும் எங்களுக்கு வாய்த்த ஆசிரியைகளே காரணம்தமிழ் வகுப்பு எப்போது வரும் என்று நாங்கள் காத்திருப்போம். தமிழ் பற்று  என்பதால் அல்ல- அது பின்னால் வந்தது. தமிழ் டீச்சர் பிரேமா எங்களுடைய கதாநாயகி. கோவில் சிலைபோல உடம்பில் மிக ஸ்டைலாக சேலை அணிந்திருப்பார். நம்பமுடியாத நீளத்துக்கு ஜடை. அவரை எங்களுக்குப் பிடிக்க வேறு காரணம் இருந்தது. பெயர்ச் சொல்,வினைச் சொல், இடைச்சொல் ,என்று கழுத்தை அறுக்காமல் எங்களுக்கு இணையாக ஆடவும் பாடவும் தயாராக இருப்பார். அவர் பாடம் நடத்துவது போலவே இராது .மழையும் குளிரும் இல்லாத நாட்களில் மரத்தடியில் வெட்டவெளியில்தான்  வகுப்பு. தமிழ் பாடத்தோடு அது நிற்காது. பறவைகள் மலர்கள் மரங்கள் விலங்குகள் நட்சத்திரங்கள் என்று பிரபஞ்ச ரகசியமே அங்கு விரியும். ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை இருக்கும். கதை மூலமே எனது உலகம். இதழ் இதழாகப் பூ விரிவது போல மலர்ந்தது. வண்ணங்கள் மிகுந்த சினேகிதமான உலகமாக. அதுவே சத்தியம் என்று தோன்றிற்று. அது ஒரு கற்பித உலகமாக நிச்சயம் இருக்கவில்லை. உயர்நிலைப்பள்ளியில் மிஸ் கோமளம் கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் நேசிக்கக் கற்றுகொடுத்தார்பாண்டியனின் சபையில் கண்ணகி வந்து நின்று நீதி கேட்ட அதிர்ச்சியைத் தாங்கமுடியாமல்யானோ அரசன், யானே கள்வன்என்று பாண்டியன் இறந்ததும் தன்னுயிர் கொண்டு அவனுயிர் தேடினள் போல் பெருங்கோப்பெண்டும் ஒறுங்குடன் மாய்ந்தனள்என்ற வரியைச் சொல்லிச் சொல்லி ரசிப்பார். ஆண்டாளின்பால்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவாரஎன்ற வரிகளை அவர் விளக்கும்போது எங்கள் நாவில் நீர் ஊறும். இப்பவும் சர்க்கரைப்பொங்கல் சாப்பிடும்போதெல்லாம் மிஸ் கோமளத்தின் நினைவு வருகிறது. தீவிர காந்தி பக்தையும் பாரதியின் உபாசகியுமான எங்கள் பாட்டு டீச்சர் ஜனகம்மா பாடும் விடுதலை, விடுதலை, விடுதலை!என்ற ஓங்கிய குரல் மனசை சிலிர்த்து பாரதியிடம் நேசம் கொள்ளவைத்தது. பாரதியின் பல பாடல்கள் பாடம்  ஆனது பத்துவயதில்.
ஆசிரியைகளின் ஈடுபாடே என்னைத் தீவிர வாசிப்புக்கு அழைத்துச் சென்றது. பெங்களூரில் எங்கள் வீட்டில் தமிழ் புத்தகங்கள் இருக்கவில்லை. மாறாக ஆங்கிலப் புத்தகங்கள் அநேகம். நான் எட்டாம் வகுப்பை முடிப்பதற்குள் ஜேன் ஆஸ்டின் , ப்ராண்டே சகோதரிகள், அலெக்சாண்டர் ட்யூமா, சார்ல்ஸ் டிக்கன்ஸ் என்று கைக்குக் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாசித்திருந்தேன். விகடன், கல்கி கலைமகள் ஆகிய பத்திரிக்கைகளில் வந்த கதைகளையெல்லாம் வரி விடாமல் படிப்பேன். அத்துடன் அது நிற்காது. பள்ளிக்குச் செல்லும் வழியில் தமிழ் தெரியாத என் சினேகிதிகளுக்கு லக்ஷ்மி கல்கி ஜெயகாந்தன் ஆகியோரின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்வேன். அதைக் கேட்க ஆசிரியைகள் கூடக் காத்திருப்பார்கள்.!
இப்போது நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. பள்ளிப்படிப்பு மிக சரளமாக நகர்ந்ததும் பத்தாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண்வாங்கி தேர்ந்ததும் எந்தவித டென்ஷனும் இல்லாமல் முடிந்தது எப்படி என்று. அந்த காலத்தில் standard  குறைவாக இருந்ததாகுறைவுதான் என்று இன்றைய பாட திட்டங்களைப்பார்க்கும்போது மலைப்பு ஏற்படுகிறதுஇன்றைய குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும் exposure ரினால் அதிக புத்திசாலிகளாக இருக்கிறார்கள். சந்தேகமே இல்லை.. ஆனால் அன்று பல திசைகளில் மனசு சிதறாமல் குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் கவனம் குவிந்திருந்தது. விளையாட்டுக்கு என்று ஒரு பீரியட் தினமும் உண்டு. விளையாடியே ஆகவேண்டும். நான் சற்று சோம்பேறி. ஒரு புத்தகத்துடன் ஒதுங்குவதைப்பார்த்தால் டீச்சர் உடனடியாகத் துரத்த வருவார். வெறும் புத்தகப் புழுவாக இருந்தால் வெளி உலகத்தில் நீ சுழிப்பாய் என்பார். எது எப்படியோ அன்று பெற்றோர்கள் அதிக நிம்மதியுடன் இருந்தார்கள்.அட்மிஷன் சுலபமாகக் கிடைத்தது. கட்டணம் மிகக் குறைவாக இருந்ததுபள்ளிச் சிறுவர்களுக்கோ வாழ்வே கொண்டாட்டமாக இருந்தது. படிப்பில் ஆசை இருந்தவர்கள் சுயமாகப் படித்தார்கள். நல்லாசிரியர்கள் அவர்களிடம் அக்கறைகொண்டு உற்சாகப் படுத்தினார்கள். எந்த திணிப்பும் இல்லை. நிர்பந்தமும் இல்லை. இன்றைய வாய்ப்புகள் அன்று இல்லை. அதனாலேயே இன்றைய போட்டியும் அழுத்தமும் அன்று இல்லை.   
எனது பள்ளிப்பருவத்துத் தாக்கமே எனது இரு குழந்தைகள் வளர்ப்பில் என்னை வழிநடத்திற்று. நல்ல வேளையாக அவர்கள் வளரும் சமயத்தில் அதிக பட்ச டிவி சானல்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ், மொபைல் ஃபோன்கள் என்கிற கவனஈர்ப்புகள் இருக்கவில்லை.நான் அவர்களுக்கு விளையாட்டு சாமான்களே வாங்கிக்கொடுத்ததில்லை. பரிசாக வந்தவையே வீட்டில் இருக்கும். நான் அவர்கள் முதல் வார்த்தை பேசுவதற்கு முன்பே  புத்தகங்கள் வாங்க ஆரம்பிப்பேன். . அவர்களது கவனமெல்லாம் புத்தகத்தில் செல்லும்படி கதைகள் சொல்வதும் சொற்களைப் பழகுவதும் எங்களுக்குள் நடந்த விளையாட்டு.. இருவரும் இன்றும் தீவிர வாசிப்பாளர்களாக இருப்பதற்கு அதுவே காரணம் என்று தோன்றுகிறது. அவர்கள் எனது ஆசான்களாக உணர்கிறேன்..அவர்கள் பள்ளியில் படிக்கும்போது அவர்களை நான் படி படிஎன்று வற்புறுத்தியதில்லை.ரொம்பப் படிக்காதே என்று சொன்ன முட்டாள் தாய் நான்.   


இன்றைய பள்ளிப்படிப்பு? நினைத்தாலே தலை சுற்றுகிறது. வாழ்க்கை இப்போது அதிக சிக்கலானது- பெற்றோர்களுக்கு. அது ஒரு பத்ம வியூகம். அதில் சிக்கிக்கொண்ட அபிமன்யுகள் நாம்.