Monday 23 February 2015

காரணமும் காரியமும்

காரணமும் காரியமும் ஒரு சுழற்சி என்று நம்பும் மரபு நமது. அது ஒரு சங்கிலித் தொடர். சம்பவாமி யுகேயுகே என்பது போல. சரித்திரம் திரும்புகிறது என்று சொல்வதும் இந்த அர்த்தத்தில்தான். உலகில் நடப்பது எதுவுமே புதியதில்லை. நடப்பதே திரும்பத்திரும்ப நடக்கிறது. ஏனெனில் அதன் சூத்ரதாரி மனிதனே. பல சமயங்களில், அநேகமாக எல்லா சமயங்களிலும் காரணங்களை ஆராயாமல் இருப்பது நிம்மதி.   தர்க்கத்துக்குப்புறம்பாக நடை பெறும் மனித செயல்களுக்கு நமக்கு விஞ்ஞான விளக்கங்கள் கிடைக்கப்போவதில்லை.மனோதத்துவ விளக்கங்கள் அயர்வைத் தருபவை.

சமீபத்தில்  அடுத்தடுத்து நடந்திருக்கும் இரண்டு மிகப் பெரிய அதிர்வைத்தரும் சம்பவங்கள் அறிவார்த்த தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. முதலில் நடந்த அந்த ரத்தத்தை உறைய வைத்த பெஷாவர் படுகொலைகள்பச்சிளம் சிறுவர் சிறுமியரை பலிகடாக்கள் ஆக்கிய குரூரத்தனமான அரக்கத்தனமான பயங்கரவாதம். உலகமே ஸ்தம்பித்து வெகுண்டது. அந்தச் செயலுக்கும் பல அரசியல் வல்லுனர்கள் ரிஷி மூலம் நதி மூலம் ஆய்ந்து விளக்கம் தர முயன்றார்கள். பாகிஸ்தான் ராணுவத்தின் மேல் இருந்த கோபத்தை அவர்களது சந்ததியினர் படிக்கும் பள்ளியை நிர்மூலமாக்கித் தீர்த்துக்கொண்டார்களாம்இறைவனின் பெயரில் அத்தகையக் கிராதகத்தைச் செய்யும் மனங்களில் இறைவன் எப்படி இருக்கமுடியும்? நம்பும்படியாக இருக்கிறதா? அவர்கள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை. மத அடிப்படைவாதிகள் இல்லை. வெறும் இதயமற்ற அரக்கர்கள் மட்டுமே. அவர்களை இஸ்லாமியர் என்று தயவு செய்து முத்திரைக் குத்தாதீர்கள்.
       
ஜனநாயக் உலகத்தை உலுக்கிய மற்றுமொரு நிகழ்வு சமீபத்தில் ஃப்ரான்ஸ் நாட்டில் ஷார்லீ ஹிப்டோ பத்திரிக்கை அலுவலகத்தில் பட்டப்பகலில் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர்களைப் பெயர்சொல்லி விளித்து, நீயா நீயா என்று கேட்டு  [வாயில் காப்போரை, ஒரு முஸ்லிம்- சேர்த்து] 12 பேரை ச்சுட்டுக்கொன்று அல்லாஹு அக்பர் , அல்லாவின் புகழ் காப்பாற்றப்பட்டது என்று கத்தியபடி தப்பியவர்களின் கோர தாண்டவம்.
 ஷார்லீ ஹிப்டு வின்  கார்டூன்கள் மிக சென்ஸிட்டிவ்வான விஷயங்களைப் பரிகசிப்பதற்குப் பேர்போனவை . தொடர்ந்து இஸ்லாமிய மதத்தையும் நபிகள் நாயகத்தையும் பரிகசித்தவை. ஃப்ரான்ஸ் நாடு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரத்துக்கு எந்த வித தடைகளும் கிடையாது. இந்திய சட்ட சாஸனத்தில் கருத்து/பேச்சு சுதந்திரத்துக்கு உரிமை அளித்தாலும்  clause2  சில கட்டுப்பாடுகள் விதிக்கிறது. ஃப்ரான்ஸ் நாட்டின்  கட்டுப்பாடற்ற சட்டம் விவாதத்துக்குறியது என்பது இப்போது பிரச்சினையில்லை. ஷார்லீ ஹிப்டு அத்துமீறி சென்றதா மற்ற இனத்தவரை அநாவசியமாகக் கோபத்துக்குள்ளாக்கிற்றா என்கிற விவாதமும் தேவையற்றது. எப்படிப்பட்ட விளைவை அவை ஏற்படுத்தியிருந்தாலும் அவர்களுடைய உயிரை பறிப்பதற்கு எவருக்கும், எந்த காரணத்துக்காகவும் , உரிமை இல்லை.    நீங்கள் மக்களுக்கு உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் அவர்களைச் சிரிக்க வையுங்கள், இல்லாவிட்டால் அவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள் என்றார் நக்கலுக்குப் பெயர்போன எழுத்தாளர் ஆஸ்கர் வைல்ட். சிரிக்க வைக்கமுடியாத தொலைவுக்குத் தள்ளப்பட்டவர்கள் அவர்கள் என்று பொருள்படும்படி கார்டியன் பத்திரிக்கையில் ஜோ ஸாக்கோ என்கிற கார்டூனிஸ்ட் எழுதியிருக்கிறார்ஷார்லீ ஹிப்டு பத்திரிக்கையில் யூதர்களைப்பற்றி பரிகாசமாக ஏதும் கார்டூன் வராது என்கிறார். அந்தப் பத்திரிக்கை இனவெறிமிகுந்தது என்கிற வாதம் இப்போது தலையெடுக்கிறது. இப்படியெல்லாம் காரணம் தேடுவது கொலைகளுக்கு நியாயம் கற்பிப்பதாக இல்லையோ? காரணம் நமக்குத் தேவையில்லைஎன்ன காரணம் இருந்தால் என்ன ? உடனே துப்பாக்கி ஏந்தி உயிரைப்பறிக்க எவன் உனக்கு அதிகாரம் கொடுத்தது?   எண்ணங்களைப் பொசுக்கிவிடலாம் என்கிற மூர்க்கத்தை நீ எங்கிருந்து என்ன காரணத்துக்காகக் கற்றிருந்தால் என்ன?   பொங்கி விட்டன  ஐரோப்பிய நாடுகள். ஜெர்மனியின் அதிபர் மார்கெல், ப்ரிட்டிஷ் பிரதமர் காமரூன் உள்பட பாரீஸில் நான்  ஷார்லீ’ ‘ஜெஸ்வீ ஷார்லீஎன்கிற கோஷத்துடன் லட்சக்கணக்கான மக்களுடன் நடந்தார்கள் இறந்துபோனவர்களுக்காக மெழுகுவர்த்திஏந்தி. அந்த பிரும்மாண்ட கூட்டத்தில் வேறு ஒன்றுமல்லவா பொங்கியிருக்கும்? மிஞ்சியிருக்கும் சகிப்புத்தன்மை முற்றிலுமாக ஒழிந்து வெறுப்பல்லவா ஒவ்வொரு நபரிலும், வயோதிகர், இளைஞர்கள் யுவதிகள், சிறுவர், சிறுமியர் மனத்தில் கொழுந்துவிட்டிருக்கும். ? அவர்கள் அப்படி நடக்கையிலேயே ஃப்ரான்ஸின் பல பகுதிகளில் இருந்த மசூதிகள் தாக்கப்பட்டன.  

அந்தக் கொலை வெறியர்களை தயவுசெய்து இஸ்லாமியர்கள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் கடவுளை மறுப்பவர்கள்அல்லாவின் பெயரைச் சொல்லி அவரை தினம் தினம் கொல்பவர்கள். அவரது படைப்பை அழிப்பவர்களுக்கு என்ன பெயர்அவர்களால் துன்பப்படுபவர்கள்,அவமானப்படுபவர்கள், மாறாத களங்கத்தை சிலுவைபோல தூக்குபவர்கள் இஸ்லாமியர்களே என்று அந்த மூர்க்கர்கள் அறியமாட்டார்கள். அவர்களது அட்டூழியம் உலகத்து எந்த மூலையில் நடந்தாலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும்  ஆபத்து. சுமை.
அந்த மூர்க்கர்களை இஸ்லாமியர் என்று சொல்லாதீர்கள், தயவுசெய்து.



No comments:

Post a Comment