Thursday 26 February 2015

தி க்ரூட்சர் ஸொனாட்டா





உலகப்புகழ் மிகுந்த கணவனின் நிழலாக இருந்த ஒரு பெண்ணின்  உண்மைக் கதை  இப்போது வெளிவந்திருக்கிறது. கணவரின் இலக்கிய வளர்ச்சியில் அவளின் அசாதாரண பங்களிப்புபற்றின விவரங்கள்  வேண்டுமென்றே ஓரங்கட்டப்பட்டதும்  அவளது பிம்பத்தை அவளது கணவரின் சிஷ்யர்கள் கொடூரமாக சித்தரித்து சரித்திர ஏடுகளை  சிதைத்த  கொடுமையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. தங்களது அபிமான குருவுக்குப் புனித ஸ்தானத்தைக்கொடுக்க அவரை பாதிக்கப்பட்டவராகச் சித்தரித்து அவரது உயிர் மூச்சாக  48 ஆண்டுகள் கூட வாழ்ந்த , அவரது 13 குழந்தைகளைப் பெற்று, அவர் கவனிக்காமல் விட்ட அவரது 4000 ஏக்கர் எஸ்டேட்டைப் பராமரித்து, வீட்டை நிர்வகித்து, சட்டை தைத்து, கம்பிளி பின்னி, அவரது எழுத்துக்களைப் பலமுறை நகலெடுத்து, பின்னர் தானே பதிப்பித்து, விற்பனை செய்து   ஒரு புத்தகத்துக்கு  அரசு  பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி அவருக்காக வாதாடி வெற்றி பெற்ற  அந்தப் பெண்ணைக் கொடுமைக்காரியாகச் சித்தரித்து அவளது பெயரைக் களங்கப்படுத்தியது அவளே எழுதிய எழுத்தின் மூலம் இப்போது தெரிய வந்திருக்கிறது .

நான்கு ஆண்டுகளுக்கு முன்  கானடாவில் வசித்த  ஆன்ட் ரூ டான்ஸ்கோவ்  என்ற ருஷ்ய பேராசிரியர் என் வாழ்க்கைஎன்ற  அவளின்  நாள்குறிப்புகளைத் தொகுத்து ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டுவந்தார். ருஷ்ய மொழியில் முதல் முறையாக அந்தப் பெண்ணின் சொந்த இலக்கிய படைப்புகளும் பரணிலிருந்து எடுத்துத் தூசு தட்டப்பட்டு  வெளியிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, அலெக்ஸாண் ட்ரா பப்போஃப் என்ற   ஒரு கனேடிய எழுத்தாளர் அதில் ஆர்வம் கொண்டு நுணுக்கமாக ஆய்வு செய்து அவளது சரிதத்தை எழுதினார். சரித்திர ஏடுகளில் பதிவானது போன்ற மோசமான பெண் அல்ல அவள் , மாறாக அசாதாரண ஆளுமைக்கொண்டவள் என்பதை மிக வலுவாகச் சித்தரிக்கும் நூல் அதுசில ஆண்டுகளாகவே அந்தப் பெண்ணின் ஆளுமை பற்றின மீள் ஆய்வு அவசியம் என்கிற கருத்து இலக்கிய ஆய்வாளர்களிடம் இருந்து வருகிறதுஅந்தப் பெண் எழுதிய யாருடைய தவறு?‘ மற்றும் சொற்களில்லா கீதம்என்ற இரு புதினங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் மிகச் சமீபத்தில்வெளியாகி இருக்கின்றன.  

நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன அந்தப் பெண்- ஸோஃபியா அண் ட் ரீவ்னா டால்ஸ்டாய் இறந்து..  பதினெட்டு வயதில்  முப்பத்திநாலு வயது லியோ டால்ஸ்டாயின்  கவர்சிமிக்க நடையுடை பாவனைகளாலும் பேச்சாலும் கவரப்பட்டுத்தான் அவரை ஸோஃபியா மணந்தாள். லியோ டால்ஸ்டாய் அப்போதே அவரது எழுத்தால் பிரபலமானவர். அவரது எழுத்தை வாசித்து பரவசமடைந்த ரசிகை அவள். ஆச்சாரமான  லூதெரன் கிறித்துவ  சர்ச் மரபு சார்ந்த எண்ணங்களுடன் வளர்க்கப்பட்ட அவளுக்குக் கணவனின் பணிக்கு உறுதுணையாக இருப்பதும் குழந்தைபெற்றுக் குடும்பத்தை நிர்வகிப்பதும் தனது கடமை என்ற எண்ணம் இயல்பாக வந்தது.. ஆனால் டால்ஸ்டாய் போன்ற ஒரு மாமேதையுடன் வாழ்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை ஸோஃபியா உணர்ந்துகொண்டாள். ஸோஃபியா தினமும் டயரியில் அன்றைய அனுபவங்களை எழுதும் வழக்கம் கொண்டிருந்தாள்மேதையைப் போற்றிக்காப்பது சுலபமல்ல என்று தனது நாள் குறிப்பில் எழுதினாள் தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்வதுபோல. அவரது மனசும் எண்ணங்களும் எந்தவகையிலும் சஞ்சலத்தில் ஆழ்ந்துபோகாமல் சிதறாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். குழந்தைகளைப் பற்றியோ வீட்டுவிவகாரமோ அவரை எந்தச் சேதியும் அலைக்கழிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அவரது உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளவேண்டும். குளிர் வாட்டாதபடி கம்பளிப்போர்வையைத் தயாராக்கவேண்டும்.... 
 டால்ஸ்டாயின் பேனாவிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் அறிஞர் பெருமக்களும் ட்ஜாரும் பெருந்தகைகளும் காத்திருந்தார்கள்.   ஆனா கரினீனா என்ற அவரது புத்தகம் ருஷ்ய மக்களை ஆட்கொண்டது. ஆயிரத்து ஐனூறு பக்கங்கள் கொண்ட போரும் சமாதானமும் அறிஞர்களை பிரமிக்க வைத்ததுகௌன் ட்  லியோ டால்ஸ்டாயின் பெருமையைத்தான் உலகம் அறிந்துகொண்டது. ஆனால் அவர் பக்கம் பக்கமாக எழுதிக்குவித்த தாள்களின் நகல்களைப் பலமுறை எடுத்து எழுதி சரிசெய்தது அவரது மனைவி என்று நினைவில் கொள்ளவில்லை.பதினாறு கர்ப்பத்துக்கு இடையில் ,[மூன்று கருச்சிதைவு] 13 குழந்தைகளின் வளர்ப்புக்கு இடையில் ஒரு குடும்பத்தலைவியான  சோஃபியா எப்படிச்  செய்தார் என்கிற பிரமிப்பு யாருக்கும் ஏற்படவில்லைடால்ஸ்டாய் எழுதிய எல்லா முக்கிய படைப்புகளும் அவர்களது தாம்பத்திய காலகட்டத்தில் எழுதப்பட்டவை. போரும் அமைதியும்  வெளியானபோது டால்ஸ்டாய் தனது நண்பர்களிடம்  தான் அப்போது உணர்வதுபோன்ற அறிவார்ந்த , தார்மீக பலத்தை , படைப்புக்குத் தேவைப்படும் சுதந்திரத்தை என்றும்  உணர்ந்திருந்ததில்லை என்று சொல்லியிருக்கிறார். நிம்மதியான வாழ்க்கைச் சூழலை ஸோஃபியா ஏற்படுத்தியிராவிட்டால், டால்ஸ்டாயைப்போன்ற ஒரு படைப்பாளியால் எழுதியிருக்கமுடியாது. அவரை அடிக்கடி மனச்சோர்வு தாக்கிய நிலையில் ஸோஃபியாவின் உணர்வுபூர்வமான நெருக்கம் அவசியமாகியிருந்ததுஇருந்தும் இலக்கிய உலக சரித்திரத்தில் மிக துயரம் மிகுந்த திருமணமாக அவர்களது தாம்பத்தியம் வருணிக்கப்பட்டிருக்கிறது.

டால்ஸ்டாயுடன் அவள் வாழ்ந்த கடைசி ஆண்டை வைத்து சோஃபியாவின் ஆளுமை எடைபோடப்படுவது துயரமானது, அநியாயமானது என்கிறார் அவரது சரிதத்தை எழுதியிருக்கும் அலெக்ஸாண் ட் ரா பொப்போஃ .அதைச் செய்தவர்கள் அவளுடைய எதிரிகள்டால்ஸ்டாயின் சிஷ்யர்கள், அதில் முக்கியமாக விளாடிமர் செர்ட்காவ் என்ற  பாசாங்குக்காரன் . டால்ஸ்டாயின் பிரத்தியேக அபிமானம் பெற்றவன் , நெருக்கமானவன் என்று காண்பித்துக்கொள்ள விழைந்தவன். அவனைக் கண்டால் சோஃபியாவுக்குப் பிடிக்காது. அதனாலேயே அவன் அவளுக்கு எதிரியானான்டால்ஸ்டாயின் கடைசி காலகட்டத்தில் அவர் ஒரு ஆன்மீக நெருக்கடியில் சிக்கினதன் விளைவு அவரது இயல்பையே மாற்றிற்று. புதிய  கிறித்துவ மத போதகராக அவரைச் சுற்றி ஒரு சிஷ்ய கும்பல் வளைத்துக் கொண்டது. நிலச்சுவாந்தாரரான டால்ஸ்டாய் தனது எஸ்டேட்டில் வாழ்ந்தபடியே  சொத்துக்கள் அனுபவிப்பது ஏழ்மை மிகுந்த உலகில் பாவம் என்று சொல்ல ஆரம்பித்தார். பணியாளர் சூழ்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர், சமத்துவம் பேசினார். பதினாறு முறை மனைவியை கர்ப்பம் கொள்ள வைத்தவர், எண்பது வயதிலும் உடலுறவில் ஈடுபட்டவர்பிரம்மச்சரியத்தின் பெருமைகளைப் பற்றிப் பேசினார். மிக உன்னத படைப்புகளை உலகுக்குத் தந்தவர் படைப்பிலக்கியத்தையும் கலைகளையும்  நிராகரித்தார் . ஆன்மீகத் தலைவராக அவரை வரித்த கும்பல் அவரை ஒரு துறவியாகக் காட்சி அளிக்க விரும்பிற்று. டால்ஸ்டாய் ரகசியமாக தனது சொத்துக்களையெல்லாம் தர்மத்துக்கு தாரைவார்க்க உயில் தயாரிப்பது [செர்ட்காவின் தூண்டுதலில்] அறிந்து பதிமூன்று குழந்தைகளையும்  வருவோர் போவோர் கும்பலையும் சமாளிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்த சோஃபியா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. டால்ஸ்டாய்க்கு ஜால்ரா அடித்த கும்பலின் போலித்தனமும் பாசாங்கும் அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்திற்று. ஆனால் செர்ட்காவ் அவளை ஒரு அரக்கி என்றும் , டால்ஸ்டாய் என்ற மாமனிதரின் ஆன்மீகத் தேடலுக்குக் குறுக்கே நின்ற தீமைஎன்றும்  பரவலாக சேதி பரப்பினான். அதன் உச்சகட்டமாக, டால்ஸ்டாய் ஒரு பனிமிகுந்த நவம்பர்மாத இரவு [1910]தமது எண்பத்தி இரண்டாம் வயதில் அவர் வாழ்ந்த யாஸ்னயா போல்யானா என்ற அவரது எஸ்டேட்டிலிருந்து ஸோஃபியாவுக்குச் சொல்லாமல் கிளம்பிச் சென்றார். அவர் கிளம்பியது அவரது சிஷ்ய கும்பலை சந்தோஷப்படுத்தியது.டால்ஸ்டாய் மனைவியின் துன்புறுத்தல் பொறுக்காமல் வெளியேறியதாக  செ ர்ட்காவ் பகிரங்கமாக சோஃபியாவைக் குற்றம் சாட்டினான். டால்ஸ்டாயின் வெளியேறல் ஒரு இதிகாச புனிதம் பெற்றதுஆடம்பர சௌகரியங்களுக்கு நடுவே வாழ எனக்கு மனசு இடம்கொடுக்கவில்லை என்று டால்ஸ்டாய் ஸோஃபியாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். உண்மையில் அவர்கள் ஆடம்பர வாழ்வு வாழவில்லை. அவருடைய வீடு  - யாஸ்னயா போல்யானாமிக எளிமையானது என்று இப்பவும்  அதைச் சென்று தரிசிக்கும் பார்வையாளர்கள் புரிந்துகொள்வார்கள். செர்ட்காவும் அவனது சகாக்களும் ஸோஃபியாவைப்பற்றி பரப்பிய வதந்திகளை மக்கள் நம்பினார்கள் .. டால்ஸ்டாய் ஒரு பாதிக்கப்பட்டவராக அதற்குக் காரணமான ஸோஃபியா மன்னிக்கப்பட முடியாதவளாக உருவானார்கள்

வீட்டை விட்டுக் கிளம்பிய அடுத்த பத்தாம் நாள்  டால்ஸ்டாய் ஒரு ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் காலமானார். அவருடைய உடல் நிலை மோசமான செய்தியை ஒரு தினசரி பத்திரிக்கையில் படித்துக் கணவரைப் பார்க்க ஸோஃபியா ரயில் நிலையத்துக்கு விரைந்தாள். டால்ஸ்டாயின் சீடர்கள்  அவரது அருகில் அவளை விட மறுத்தார்கள். டால்ஸ்டாயின் நினைவு தப்பிய பிறகே அனுமதிக்கப்பட்டாள்

ஆனால் இந்தக் கயவர்கள் அவளைத் துன்புறுத்தியதற்கு முன்பே டால்ஸ்டாயே அவளைத் தனது க்ரூட் சர் ஸொனாட்டா வில் தண்டித்திருந்தார். வேடிக்கை . ஆனா கெரினீனா போரும் அமைதியும் போன்ற எல்லா நாவல்களிலும் கதாநாயகியை ஸோஃபியாவின் பிம்பத்தில் கண்ட டால்ஸ்டாய் க்ரூட்சர் ஸொனாட்டாவிலும் அவளையே கதாநாயகி ஆக்கி அவள் கணவனுக்கு துரோகம் செய்தாள் என்று கொலை செய்கிறார். தன்னைத்தான் அவர் சாடுகிறார் என்று ஸோஃபியாவுக்குத் தெரியும். ஸோஃபியாவுக்கு இசை , புகைப்படம் எடுத்தல் போண்ற கலைகளில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. ஆயிரம் படங்களுக்கு மேல்  அவரால் எடுக்கப்பட்டவை இன்னும் டால்ஸ்டாய் அருங்காட்சி அகத்தில் இருக்கின்றன. இசை பயிற்சி அளிக்க வந்த கலைஞருடன் அவளுக்கு சொற்பகால ஈர்ப்பு ஏற்பட்டது டால்ஸ்டாயின் மிகுந்த பொறாமைக்கும் கோபத்துக்கும் இடமளித்தது. அதை வைத்துத் தான் க்ரூட்சர் ஸொனாட்டா பிறந்தது. படித்தவர் எல்லோருக்கும் அவளைப் பற்றித்தான் டால்ஸ்டாய் எழுதியிருக்கிறார் என்று தோன்றிற்று. அவளுக்கும் புரிந்தது. ஆனால் அதில் பாலியல் உறவைப்பற்றி டால்ஸ்டாய் எழுதிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாயின. ட்ஜார் புத்தகத்துக்குத் தடை விதித்தார். ஸோஃபியா மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும். மாறாக ட்ஜாரை நேரிடையாகப் பார்க்க ஸெய்ன் ட் பீட்டர்ஸ்பர்க் சென்றாள். புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் நவ உலகத்துக்கு ஏற்றதாக இருக்கும் என்று ட்ஜாரிடம் வாதாடினாள். கருத்துச் சுதந்திரத்துக்குத் தடை விதிக்காமல் இருந்தால் ஆனா கேரினினா போன்ற இன்னொரு புத்தகத்தை எழுதக்கூடிய உத்வேகம் டால்ஸ்டாய்க்கு ஏற்படும் என்றாள். ட்ஜார் நெகிழ்ந்து தடை உத்தரவை ரத்து செய்தார்.

 இப்போது வெளிவந்திருக்கும்  The Kreutzer Sonata Variations என்ற புத்தகத்தில் டால்ஸ்டாயின் க்ரூட்சர் ஸொனாட்டாவுடன் ஸோஃபியா எழுதி யாரும் அறியப்படாமல் பரணில் கிடந்த யாருடைய தவறு?” என்ற நாவலும் இடம் பெறுகிறது. க்ரூட்சர் ஸொனாட்டாவுக்கு அவள் தரும் எதிர்வினையாக அந்த நாவல் கருதப்படுகிறது. அது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட நாவல் ஏறக்குறைய ஒரு சுயசரிதைப்போலஅத்துடன் சொற்களில்லா கீதமும் அவளுடைய நாள்குறிப்புகளும் இடம் பெறுகின்றன.   புத்தகத்தை வெளியிட்டிருக்கும் மைக்கேல் காட்ஸ் , அதை முதல் முதலில் படித்தபோது ஆச்சரியப்பட்டுப்போனேன், இதுவரை அது யார் கண்ணிலும் படாமல் பரணில் கிடந்ததை நினைத்து என்கிறார். அவை மோசமான எழுத்து இல்லை நிச்சயம். முதல் தரமான இலக்கியம் என்று சொல்லமுடியாமல் போனாலும் அந்த எழுத்தின்மூலம் ஒரு மிக உறுதியான ஆளுமைக் கொண்ட ஒரு பெண் வெளிப்பட்டார். ஒரு படித்த பண்புமிக்க சுயசிந்தனை கொண்ட பெண். கணவரின் கருத்துக்கு மாறான எண்ணங்கள் கொண்டது மட்டுமல்ல அவற்றை வெளிப்படுத்தும் துணிவு கொண்ட பெண்.
அதைப் பதிப்புக்கும் எண்ணத்துடன் ஸோஃபியா எழுதியிருக்க வேண்டும். ஆனால் கணவரின் எழுத்தை மிக சிரத்தையுடன் பதிப்பித்தவள் தான் எழுதியதை வெளியிடத் தயங்கினாள் என்பதும் அர்த்தம் பொதிந்தது.







        

1 comment: