Monday 23 March 2015

குரல்

                                          

                                                    


வள்ளி, வள்ளி, வள்ளீ!

உடம்பு தன்னிச்சையாக விதிர்த்தது. யார் கூப்பிடுவது என்று தடுமாற்றம் ஏற்பட்டது. எந்த திசையிலிருந்து ஓசை வருகிறது? உத்தேசமாக அவளுடைய கால்கள் நகர்ந்தன. மெல்லிய பாதங்கள். அதிராமல், பூமியில் பதியாமல் சருகு மிதப்பதுபோல.

என்ன நடையிது, வர்றது தெரியாமெ, திருடன் கணக்கா?
யாரது? இடியோசைபோன்ற குரல். அவளுக்குப் பழக்கப்பட்ட குரல். அது காதில்விழும்போதெல்லாம்  குடலை நடுக்க வைத்த குரல்.
ஏண்டி இப்படி பயந்து சாகறே?’
பயம்தான். அது தேகம் முழுவதும் வியாபிக்கும். வெட வெட என்று உடம்பு நடுங்குகையில்  கண்கள் குளமாகும்.
ஐய்யோ வேணாம் விட்டுடுங்க, விட்டுடுங்க.

அடச்சீ துப்புகெட்ட கழுதை!
அரக்கபரக்க அவள் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள் குரல் வந்த திசையைத் தேடி.
அவளுக்கு நெஞ்சு படபடத்ததுயாரோ துரத்த வருவதுபோல அவள் வேகமாக நடந்தாள். அடி வயிறு துவண்டு மார்பு குத்துவலியெடுத்தது.
நமக்குப் பித்துத்தான் பிடிச்சுப்போச்சுகுருட்டாம்போக்கில் கால்கள் நகர்ந்தன.

ஆத்தாடி, எத்தனை ரூமுங்க இருக்கும் இந்த வூட்டுலே?

வள்ளி ! எங்க தொலைஞ்சு போனா அவ?’

இத வரேம்மா’ . குரல் பிசுபிசுத்து தொண்டைக்குழிக்குள் சொற்கள் கரைந்தன.

எங்க போனே, எவ்வளவு நேரமா கூப்பிட்டுக்கிட்டிருக்கேன். இந்த ரூமை சீக்கிரமா க்ளீன் பண்ணு. நாங்க வெளியிலே போகணும்’.

சரி என்று தலையைமட்டும் அசைத்தபடி அவள் துடைப்பத்தை எடுக்க ஓடினாள்.

சரியான அசமஞ்சமா இருக்கும் போல இருக்கு. ஆனா அதெப்பாத்தா திட்டமுடியல்லே.பயந்து சாகிறமாதிரி இருக்கா. Like a startled hare! ’

கிராமத்துப் பொண்ணு பழகிடும்

அவளுக்கு எதுவும் செவியில் விழவில்லை. அவர்கள் வேறு ஏதோ பாஷை பேசினார்கள். அல்லது அவர்கள் பேசும் தமிழ் வேறு. அதைக் கேட்கவும் அவளுக்கு ஆர்வமில்லை. கைகள் பரபரவென்று மூலை முடுக்கைப் பார்த்துத் துப்புரவு செய்தன. சொல்லிக்கொடுத்தபடி சின்ன வாளியில் நீர் நிரப்பி, ஒரு குப்பியிலிருந்து வாசமாக இருந்த ஒரு திரவத்தை அளவாக அதில் ஊற்றிக்கலந்து துடைக்கும் துணியை அதில் அலசிப் பிழிந்து பளிங்கு போலப் பளபளக்கும் தரையைத் துடைத்தாள்

ஆச்சா?’
ஆச்சும்மா’.
என்ன, உன் குரலே இப்படித்தானா?’
குழப்பத்துடன் விரிந்த புன்னகையுடன் தலை அசைந்தது.

எஜமானி சிரித்தாள். நீ பேசல்லேன்னா பரவாயில்லே. வேலையை ஒழுங்கா செஞ்சா போதும்.

செய்வேன்’.

எஜமானி ஏன் சிரிக்கிறாள் என்று புரியவில்லை. இவர்களது பேச்சுப் புரியாததுபோல சிரிப்பும் விளங்காது என்று தோன்றிற்று. விளங்காமல் போவது பீதியை அதிகரித்தது. கண்ணைக்கட்டி நிற்பதுபோல.

கிச்சன் மேடையிலே நாஷ்டா வெச்சிருக்கேன் . சாப்பிட்டுட்டுப் போ.
அவளுக்கு சுத்தமாகப் புரியவில்லை. என்னங்க?’
கடவுளே. சமையல் ரூமிலே சாப்பாடு வெச்சிருக்கேன்னேன்.
சரிங்க’.
வள்ளி, சித்த நில்லு!
என்னங்கம்மா?’
எஜமானி அருகில் வந்து ஆராய்ந்தபோது கடவுளே என்ன பாக்குது இந்த அம்மா என்று கூச்சமெடுத்தது.
என்ன இது கழுத்தெல்லாம் காயமா?’
ஒண்ணுமில்லேங்கம்மா’.
எஜமானி அருகில் வந்து உற்று பார்த்தாள்.
தழும்பாட்டம் இருக்கு.
அவள் இல்லை என்பதுபோல தலையசைத்தாள்.
அது போயிரும்’.
எஜமானி சந்தேகத்துடன் பார்த்தாள்.

சரி போ’.

காற்றை  போல பாதங்கள் நகர்ந்து காத தூரம் இருந்த சமையல் அறையைக் கண்டுபிடித்தனமேடைமேல் ஒரு பீங்கான் தட்டில் ஏதோ பதார்த்தம் இருந்தது. இரண்டு  சப்பாத்தி. அதனுடன் ஏதோ காய். சப்பாத்தியை விண்டு சாப்பிடும் போது  காரணம் புரியாமல் கண்களில் நீர் நிறைந்தது. ஓவென்று அழவேண்டும்போல் இருந்தது. வயிறும் கூடச் சேர்ந்து ஓலமிட்டது. ஒரு லோட்டாவில் நீரை நிரப்பி அதைக் குடித்தபடியே சாப்பிட்டு முடித்தாள்.குழாயடிக்குச் சென்று முகத்தைக்கழுவி  துப்பட்டாவினால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். நினைவாகக் கழுத்தை மூடிச் சுற்றி கீழிறக்கி இடுப்பில் செருகிக் கொண்டாள்.

அஞ்சலையிடம் கடன் வாங்கி அணிந்த உடுப்பு. சேலையில் பழகிய உடம்புக்கு முதலில் மகாக் கூச்சமாக இருந்தது.
இந்த டிரெஸ்தான் வேலை செய்ய சௌகர்யம்டீ’.
எனக்கு என்னவோமாதிரி இருக்குக்கா.
அடப்போடீ. ஸூப்பரா இருக்கு.
வேலை செய்யும்போது அஞ்சலை துப்பட்டாவை மூலையில் வைத்துவிடுகிறாள்.
நீ என்னவோ செய்யி. நா இப்படித்தேன் செறுகுவேன்அதைத் தலைப்பைப்போல் போர்த்தி செறுகிக் கொள்ளும்போது சற்று ஆசுவாசமாக இருந்தது.

ஈரமாகிப் போன துப்பட்டாவை மார்பின் மேல் போர்த்தி அவள் வந்து நின்றபோது எஜமானி காரைக்கிளப்பிக்கொண்டிருந்தாள்.
நாளைக்கு இதே மாதிரி வந்துடு’.
சரிங்க’.
வந்துடு. வந்துடு.
மந்திரம்போல வார்த்தை. அதுதான் இங்கே அவளை இழுத்தது. இப்போது அது ஏதோ கேடு கெட்ட வார்த்தைபோல பயமேற்படுகிறது.

வந்துடு வள்ளி. ஊரிலே பேசுவாங்கதான். கண்டுக்காதேஇங்க உன் வாழ்க்கையே மாறிடும் பாரு.
எப்படி? புரியவில்லை. இந்த பிரும்மாண்டமான வீடுகளைக்கண்டாலே  பயமெடுத்தது. அங்கிருந்த கண்ணாடித் துப்புரவு அன்னியமாகப் பட்டது. இதுவே வேற்று கிரகம் போல. அவளுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. இங்கிருந்து நா என்ன செய்யப்போறேன்?
அஞ்சலை தலையில் அடித்துக்கொள்கிறாள்.
அவுங்க கொடுக்கற  துட்டுக்காக நீ வேலை செய்யிறஅதுக்குமேல சம்பந்தம் எதுக்கு?’
பிறகு முணுமுணுக்கிறாள். எது தேவைன்னே உனக்கு இன்னும் புரியல்லே.
தெருவைக்கடந்து குத்துமதிப்பாக ஓர் ஊகத்தில் அஞ்சலை சொன்ன இடத்துக்கு வந்தாள். அவள் வேலை செய்யும் வீட்டருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தாள் . வெய்யில் பொசுக்கியது. ஷிமோகாவே தேவலை. பெங்களூர் இப்படிக் கொளுத்தும் என்று தெரியாது.இரண்டு மார்பும் கல்லைக்கட்டியமாதிரி கனத்தன. அவள் கைகளை இறுக்கி மார்புக்குக் குறுக்காய் மடித்துக்கொண்டாள். பிறகு முழங்கால்களைத் தூக்கி மடித்து  முகத்தைப் புதைத்துக்கொண்டாள். கழுத்தைச் சுற்றி இருந்த துப்பட்டாவைத் தளர்த்தினாள்சட், என்ன இப்படி அழுகை வருது? குழாயைத் தொறந்துவுட்டமாதிரி ? நிறுத்தமுடியவில்லை. புதைந்த இருளில் என்னென்னவோ முகங்கள். பேய் முகங்கள். குதறவரும் நாய்கள்குரல்கள். அவற்றையெல்லாம் உதறித்தள்ளி எதையோ தேடினாள்.   பிடிபடாமால் நழுவிற்று. அவள் அதை உற்றுப் பார்த்தாள். பார்வை மங்கிப் போனதுபோல இருந்ததுமறந்துகூட போயிரும் போல இருக்கு. அதைத் தாவிப்பிடிக்க வேண்டும் போல் இருந்தது. அது அருகில் வரவே இல்லைஅவளுக்கு அடிவயிற்றிலிருந்து சுருண்டு இப்போது கேவலாக அழுகை வெடித்தது.

ஏய், வள்ளி! ஏன் அழுவறே இப்பிடி நடு ரோட்டிலே குந்திகினு? சீ , நீ ஷிமோகாவிலே ஏதாச்சும் செய்யி ,இங்க இப்படி செஞ்சியானா தப்பா நினைப்பாங்க.

அவள் முகத்தையும் கண்ணையும் மேலங்கியினாலேயே துடைத்துக் கொண்டாள். எதிரில் நின்ற அஞ்சலையின் முகத்தில் சங்கடம் தெரிந்தது . லேசான எரிச்சல் போல் தெரிந்தது.
ஏண்டி இவளே இப்ப என்ன ஆச்சுன்னு அழுவறே? அந்த வூட்டுப் பொம்பளை திட்டிச்சா?”

அவள் இல்லை என்று தலையசைத்தாள்.

பின்னே?’
அவளுக்கு அஞ்சலையை நிமிர்ந்து பார்க்கமுடியவில்லை. முழங்காலுக்குள் பார்வையைப் பதித்தபடி சொன்னாள்.

நா போயிடறேன்க்கா.

சரியான பேஜாராப்போச்சு உன்னோட.

ஏதோ தப்பு செய்யிறமாதிரி இருக்குக்கா ‘.

ஒரு தப்புமில்லே. சும்மாக்கெட எழுந்திரு. போலாம். வெய்யிலேறி போச்சு’.

அவள் எழுந்து தலைகுனிந்தபடி நடந்தாள். அக்காவுக்கு என் பிரச்சினைப் புரியாது என்று நினைத்துக்கொண்டாள். இருவரும் பிரதான சாலைக்கு வந்ததும், நகரும் வாகனங்கள் விரையும் வரை காத்திருந்து விறு விறுவென்று  குறுக்கே கடக்கும்போது பீதியுடன் அக்காவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.    
அஞ்சலை ஏதோ யோசனையில் இருப்பவள்போல் இருந்தது சௌகர்யமாக இருந்தது. எதுவும் யாருடனும் பேசாமல் இருக்கலாம்போல் இருந்தது. செவியில் குரல்கள் கேட்டபடி இருந்தன. சாலையைக் கடக்கும்போது துரத்தியபடி இருந்தன. அவற்றிலிருந்து எப்படி விடுபடுவது என்பதே பிரச்சினையாகும்போலிருந்தது. அஞ்சலை காதில் சீழ் வழிகிறது என்று பஞ்சு வைத்துக்கொள்கிறாள். அப்படி அவளும் வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றிற்று. ஆனால் அஞ்சலை யின் காதில் பஞ்சுமட்டும் இல்லை. அவளுடைய கைபேசியில் ஏதோ ஒயரைப் புகுத்தி இரண்டு செவியிலும் வைத்துக்கொள்கிறாள் . அதில் சினிமா பாட்டு வரும். சதா பாட்டு கேட்கவேண்டும் அவளுக்கு.
எப்ப பாரு பெருக்கி தொடைச்சுக்கிட்டு  பாத்திரம் வெளக்கிக்கிட்டு இருந்தா கிறுக்கு புடிச்சுடும்.
அந்தப் பாட்டை அவளும் காதில் வைத்துக் கேட்டாள்.
நல்லாத்தான் இருக்கு.
அஞ்சலை சிரித்தாள். சும்மா வூட்டு வேலை போரடிக்குதுடீ. ஆனா படிப்பில்லே எழுத்தில்லேங்கும்போது வேற வேலைக்குப் போக என்ன தகுதி இருக்கு? ஊர்லே செஞ்ச மாதிரி இப்ப தோட்ட வேலைக்குப் போக முடியாது. அப்பவாவது அம்பது நூறு பேருக்கு நடுவிலே செய்வோம். பொழுதுபோயிறும் கஷ்டமான வேலைன்னாலும். இந்த வேலை போர்தான்’.
போர்னா?’
பேஜாருன்னு அர்த்தம்.அதுக்குத்தான் பாட்டு.
இதிலே இன்னொரு மேட்டர் இருக்குது. வீட்டுக்கார அம்மா டோஸ் விட்டாங்கன்னா காதிலே விழாது!’’
அஞ்சலை பகபகவென்று சிரித்தாள்.

அவள் ஊகமாக அஞ்சலையின் பேச்சைப் புரிந்துகொண்டு சிரித்தாள்.
அஞ்சலை இன்னும் என்னெனவோ இங்கிலீஷ் வார்த்தை சொல்வாள்
நீ ஏங்கா இந்த வேலை செய்யணும்?’
அஞ்சலை சற்று நேரம் பேசவில்லை.
என் கையிலே காசு இருந்தா எனக்கு பலம் இருக்கறமாதிரி இருக்கு. பவுடர் வாங்கவும் வளையல் வாங்கவும் அந்த ஆளை ஏன் கேக்கணும்?’
அதுமட்டுமில்லை. தினுசு தினுசாக உடுப்பும் போட்டுக்கொள்கிறாள். சூடிதார்தான். இங்கு வீட்டுவேலைக்குச் செல்பவர்கள் எல்லாருமே பளிச்சென்றுதான் இருக்கிறார்கள். அப்படி இருக்கவே வேலைக்குப் போவதுபோல.
அதான் சொன்னேனே இங்கே உன் வாழ்க்கையே மாறிடும் பாரு’.

அவளுக்கு இன்னும் புரியவில்லை.   உடை மாறியிருந்தது. இயல்பாக நடக்கக் கூட முடியவில்லை. கால்கள் பின்னிக்கொள்கின்றன. மனசில் எந்த நேரமும் பயம் கப்பியபடி இருக்கிறதுஎந்த தைர்யத்தில் ஷிமோகாவைவிட்டு வரமுடிந்தது என்று புரியவில்லை. தைர்யமில்லை அது. திருடியைப்போல ராவோடு ராவாக பேரூந்தில் யாரோ அமர்த்திவிட, வழி முழுவதும் பயந்து செத்து குளிர் மிகுந்த அதிகாலைப்போதில் பெங்களூர் வந்து சேர்ந்து அஞ்சலையைக் கண்டதும் வென்று அழுததும் அழாதே, இனிமே பயப்படறதுக்கு ஒண்ணுமில்லேடிஎன்று அவள் சமாதானப்படுத்தியதும் போன வாரம் நடந்த விஷயம்தான். இன்னும் பெங்களூர் காற்றுப் பழகவில்லை. அக்காவின் புருஷன் அவளுடன் வந்திருந்ததால் அழுகையைத் தொடராமல் அவள் கம்பீரமானாள்.
அவரு நல்லவரு என்கிறாள் அக்கா அடிக்கடி அவளை சமாதானப் படுத்துவதுபோல. யாருக்காவது உதவணும்னா ஒண்ணும் சொல்லமாட்டாரு. அதனாலெதானே உன்னைக் கூப்பிட்டேன்?
எத்தனை நாட்களுக்கு இவர்களுடன்இருக்கமுடியும்?
நல்ல புருஷன். அப்படிக்கூட ஒரு மனுஷன் உண்டா என்று அவளுக்குத் தெரியாதுஅக்காவிடம் அவர் அதிகம் பேசியோ குரலை உயர்த்தியோ அவள் பார்க்கவில்லை. ஆனால் சதா புகை பிடிக்கிறார். இரவு குடித்துவிட்டு வருகிறார். அக்கா சமைத்து வைத்துக்கொண்டு காத்திருப்பாள். அந்த ஆள் எப்போது வருவார் என்று வள்ளிக்குத் தெரியாது. சமைத்த பதார்த்தம் பாதிக்குப் பாதி மிஞ்சியிருக்கும். அவரு சாப்பிடறதே அவ்வளவுதான்.
பின்னே ஏன் இவ்வளவு சமைக்கிறே?’
சரிதான்னு கொஞ்சமா வெக்கிறேன்னு வெச்சுக்க, அவங்க அம்மாவுக்கு போன் போட்டு இவ எனக்கு சாப்பாடே தர்றதில்லேன்னு கம்ப்ளேய்ண்ட் பண்ணுவாரு.
அப்பவும் சிரிப்புதான். இந்தக்குடி மாத்திரம் விடமாட்டேங்குது. தினமும் நாப்பது மைலு பஸ் ஏறி வேலைக்குப் போகணும்.நாப்பது மைலு திரும்பி வரணும்.உடம்பு சோந்து போகும்போது குடிக்கணும்னு தோணும் போல.
நல்ல வேளை அடி உதை இல்லை. அதிசயம் இல்லே?
அதனாலேயே அந்த நிற்காத புகையையும் குடியையும் பொறுத்துக்கொள்கிறாள் என்று தோன்றிற்று. அஞ்சலையின் எல்லா விஷயமுமே அவளுக்கு அதிசயமாக இருந்தது. அவள் சொல்வதை எல்லாம் நம்புவதா என்று சந்தேகம் வந்தது.

காலையிலே வேலைக்குக் கிளம்பும்போது கடவுள் மாதிரி போவார்டி நெத்தில சந்தனப்பொட்டும் பளிச்சுனு மொகமுமா. ராத்திரி வரக்கொள்ள ஆளே மாறிடறாரு. பாழாப்போன குடி.அவன் குடியை நிறுத்தவேண்டும் என்று வாராவாரம் செவ்வாய்க்கிழமை விரதமிருக்கிறாள். வருஷத்துக்கு ஒரு முறை அம்மாவைப் பார்க்க மாலை போட்டு  மேல்மருவத்தூர் போகிறாள்.
புருஷன் மேல் அவளுக்குக் கொள்ளைப்பிரியம் என்று தோன்றும். அவன் வீட்டிற்குள் நுழையும் சத்தம் கேட்ட உடனேயே துள்ளிக்கொண்டு ஓடுவாள். அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்து குளியலறைக்கு அழைத்துச் சென்று முகத்தைக்கழுவி, தலையைத்துவட்டி லுங்கி அணியவைப்பாள். அடுத்தாற்போல் இருந்த ரேழியில் படுத்திருக்கும் வள்ளிக்குக் கேட்கும் சன்ன ஓசையில் அவளது அசைவுகள் புரியும்அவள் அவனுக்கு பதார்த்தங்களை உபசரித்தபடி இருப்பாள். அவன் சாப்பிடுவானோ ஒதுக்கித் தள்ளுவானோஎப்போது படுப்பார்கள் என்று தெரியாது. ஒரு ஓசையும் கேட்காது. விளக்கு அணைந்ததும் கப்சிப்பென்று மௌனம் கப்பிக்கொள்ளும்.
இவள் ரேழி கதவை அழுத்தி சாத்திக்கொள்வாள் . தாழ்ப்பாள் போட்டுக்க என்று அஞ்சலைதான் சொல்லியிருந்தாள்.
அதற்குப் பிறகு இவளைப் பிசாசுகள் துரத்த வரும். நாய்கள் . குதறும் நாய்கள். முகத்தில், கழுத்தில், மார்பில் வயிற்றில் தொடைகளில் பற்கள் பதியப் பதிய அதன் குரூரத்தில் அவள் பீதியில் உறைந்து குரல் எழுப்பமுடியாமல் திணறுவாள். வாய் பிணைத்திருக்கும். இரும்பாய் ஒரு கரம். வேணாம் வேணாம் என்று தலை திமிரும். அதை அடக்க ஆயிரம் இரும்புக்கைகள் முளைக்கும். எப்படி சாத்தியம்?   அது உடம்பா இரும்புத் தூணா? அதற்கடியில் அவள் நசுங்கிக் கந்தலாகி நாராய் கிடப்பாள்.
ஆத்தா...! ஆத்தாடீ ....! என்னாலே முடியாது ஆத்தா இட்டுட்டு போயிறு. எங்கெயாவது போயிறுவோம். காட்டுக்கு. மலைக்கு. நாயில்லாத எடத்துக்கு. எப்படியோ பொழைச்சுப்பேன் இல்லேன்னா சாவறேன்.
சன்னமாக அழுகுரல் கேட்டது. அது அதிகரித்துக்கொண்டே வந்து அடிவயிற்றுக்குள் புகுந்தது. குடல்களை வளைத்தது. புட்டத்தில் இறங்கி பிறப்புறுப்பிலிருந்து சீறிக்கொண்டு வெளிப்பட்டதுஅம்மா.....அவள் மார்பை அழுந்த தேய்த்துவிட்டுக்கொண்டாள். பிறகு வெறிபிடித்தவள்போல் தேய்க்க ஆரம்பித்தாள்.

அவள் ஓசைப்படமல் அழுதாள். என்ன செய்வேன். ஒண்ணும் புரியல்லே.

எத்தனை வயசு இருக்கும்டீ உனக்கு?

பதினாறுன்னு ஆத்தா சொல்லும்.

பதினைஞ்சு வயசுக்குள்ளெ என்ன அவசரம்டீ உங்க ஆத்தாவுக்கு?

அவள் பதில் சொல்லவில்லை. தாவணி போட ஆரம்பித்த நேரம் அது. கமலி, செம்பகம், மீனு எல்லோருடனும் அலுக்காமல் குளத்துக்குப்போய் குளித்துவிட்டு வந்து பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த நேரம். அம்மா அதற்கு ஒரு முடிவைக் கொண்டு வருவாள் என்று கனவில்கூட நினைக்காத நேரம்.

விடுக்கா. வந்துட்டேன் இல்லே?
அப்ப சும்மா நடுத்தெருவிலே குந்திகினு அழுவறதை நிறுத்தணும்.
சரி.
கொஞ்சம் பஞ்சு இருந்தா குடு.
இன்னாது?
பஞ்சு. காதிலே சும்மா ஏதோ இரைச்சல் கேட்குது.
மெய்யாவா?
ஆமாங்கா.
என்ன மாதிரி இரைச்சல்?
விடுக்கா.

யாரோ படபடவென்று கதவைத்தட்டினார்கள். அவள் அலறி அடித்துகொண்டு கண்விழித்தாள். பளீரென்று வெய்யில் பரவியிருந்தது.
கதவைத்திறடீ வள்ளி. இன்னுமா தூங்கறே? அவங்க வேலைக்குக் கிளம்பிப் போயாச்சு. நாம கிளம்பவேணாம்?’
அவள் அரக்கபரக்க முகத்தை கழுவிக்கொண்டு தயாரானாள்.

அப்படியா தூங்குவே?

தூக்கம் சரியா இல்லே ஏதேதோ கெட்ட கனா வருது.

கனாதானே, விடு.

வீட்டைவிட்டு வெளியேறும்போது அவளுக்கு திக்கென்றது. ஷிமோகாவிலிருந்து ஆள் வந்திருந்தது.

என்ன, என்னது?

தொண்டைக்குள் குரல் சிக்கிக்கொண்டது. பீதியில் விழிகள் பிதுங்கின.

ரொம்ப உடம்பு சரியில்லே பிள்ளைக்கு. உன்னை உடனே இட்டாரச் சொன்னாங்க.

யாரு?
உங்க ஆத்தா.

என்ன ஆச்சு?

டாக்டருக்கே சொல்லத் தெரியல்லே. ஆபத்தாயிடுச்சுங்கறாரு.

அய்யய்யோ!

அவள் அங்கேயே தரையில் அமர்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

அதான்க்கா  அப்படி கனா வந்துது.

கவலைப்படாதேடீ, எல்லாம் சரியாயிறும். நீ கிளம்பு இந்த ஆளோட. சரியானதும் வந்துடு

அஞ்சலை அவசர அவசரமாக அவளுடைய உடுப்புக்களை ஒரு சிறு பைய்யில் திணித்தாள்.

போறேன்.

சரியானதும் வந்துரு.

அவளுக்கு மீண்டும் அழுகை வந்தது. பாக்கலாம்ன்கா

அஞ்சலை ஏதோ சொல்ல வாயெடுத்து பின்பு அடக்கிக்கொண்டாள்.

அழாதேடி சரியாயிறும். கடவுள் இருக்கார்.

அவள் அதைபாற்றின நிச்சயம் இல்லாதவளாக  பதில் ஏதும் சொல்லாமல் கிளம்பினாள்.
பஸ்ஸில் அமர்ந்ததும் நினைவு வந்தவள் போல என்ன உடம்புக்கு? என்றாள்.
‘    வாந்தி பேதி’.
ரொம்ப மோசமா?’
அப்படித்தான் சொல்றாங்க.
அவளுக்கு துக்கம் குமுறிக்கொண்டு வந்தது. ரொம்ப தப்பு பண்ணிட்டேன். இனிமே பெங்களூருக்குப் போகமாட்டேன்.
பட்டணத்துப் பொண்களுக்குத் திமிரு தாஸ்தி. அது கூப்பிட்டதும் ஓடிப்போனே. ஊர் ஒலகத்திலே நடக்காததா நடந்து போச்சு?’
அவள் பேசவில்லை. மீண்டும் அழுகை வந்தது.

சரியாயிறும். கடவுள் இருக்கார்’.
இருக்காரா? அவளுக்குத் தெரியாது. இதுவரை எத்தனை அடிபட்டாலும் வாயை மூடிக்கொண்டு அழுதுதான் பழக்கம். உதவிக்கு  எந்தக் கடவுளையும் கூப்பிட்டதில்லை. அதற்கு வேற வேலையில்லையா நாய்களையும் பேய்களையும் விரட்டுவதைத்தவிர என்று தோன்றும். சாமி கும்பிடக் கோவிலுக்கு அம்மா அழைத்துக்கொண்டு போனது சின்ன வயசில் . சின்ன வயசு விரைவில் காணாமல் போனது. கடவுளையே அவளுக்கு மறந்து போய்விட்டது. அப்படி என்று ஒன்று இருந்தால் இந்த மாதிரியெல்லாம் நடக்குமா என்று அவள் நினைத்துக்கொள்வாள்.
இப்போது பீறிட்டுக்கொண்டு ஒரு பரிதவிப்பு ஆட்கொண்டது. யார் காலையாவது கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, காப்பாத்துங்க என்று அழவேண்டும் போல் இருந்தது
வழிமுழுவதும் அவளுக்குப் பரிச்சயமில்லாத அந்தக் கடவுளை வேண்டிக்கொண்டாள். காப்பாத்துங்க. நா தப்பு பண்ணிட்டேன்
 ஷிமோகாவை அடைந்ததும் பஸ் நிலையத்தில் இருந்த குழாயடியில் முகத்தைக்கழுவி இருவரும் அரசினர் மருத்துவமனைக்கு விரைந்தார்கள். ரேழியிலெல்லாம் நோயாளிகள் படுத்திருந்ததைப் பார்த்து அவளுக்கு பீதியேற்பட்டது. எல்லோரும் சாகவே வந்திருப்பதுபோல் இருந்தது. .
ஒரு விசாலமான அறையில் இருந்த  கடைசி கட்டிலில் ஒரு சின்ன பொட்டலம். பக்கத்தில் அவளுடைய அம்மா. தூங்கி வழிந்த நிலையில். அவள் அம்மா என்று உலுக்கியதும் அம்மா கண் திறந்து மிரண்டு பார்த்தாள்.
அம்மாடி வந்தியா? பாருநீ அம்போன்னு விட்டுபுட்டு ஓடினியே கிழிச்ச நாராய் கெடக்கு.
அடி வயிறு குலுங்க மார்பு கனக்க அவள் அந்தப் பொட்டலத்தைத் திறந்தாள். கடவுளே எத்தனை எளைச்சுபோச்சு? கண் மூடியிருந்தது. அவள் கலவரத்துடன் அதன் நாசியை தொட்டுப் பார்த்தாள் மூச்சு இருந்தது.
இன்னும் சாவல்லே. உனக்காகக் காத்துக்கிட்டிருக்கு’.
அவள் குலுங்கக்குலுங்க அழ ஆரம்பித்தாள்.
நீதானே என்னைப் போவச் சொன்னே? ‘
அம்மா பதில் சொல்லவில்லை.
அவளுக்கு திடீரென்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இதுவரை காணாமல் போயிருந்த வார்த்தைகள் எல்லாம் புறண்டு எழுந்து சரளைகற்களைப்போல உதிர்ந்தன.
நீதானே . நீதானே....நீதானே... நா கேட்டேனா? நா சொன்னதை நம்பினியா? என்னைக் காப்பாத்த வந்தியா...
அவள் நிறுத்தினாள் . பக்கத்துக் கட்டில்களில் போர்வைகள் நகர்ந்து எட்டிப்பார்த்தன. அவள் பேசாமல் குனிந்தாள். பொட்டலத்தில் அசைவு தெரிந்தது. பூ மலர்வதுபோல கண்கள் திறந்தன. அவளை ஒரு விநாடி உற்றுப் பார்த்து அகலமாகச் சிரித்தது.
அவள் பித்துப் பிடித்ததுபோலச் சிரித்தாள்.
சிரிக்கிறா. இதப்பாரு, சிரிக்கறா!
குபுக்கென்று மார்பு அங்கி நனைந்தது. அவள் குழந்தையை வாரி யெடுத்து , மேல் அங்கியின் பொத்தானை அவிழ்த்தாள்.
அந்த செப்பு வாய்க்கு அசுரபலம் வந்ததுபோல எட்டு நாட்கள் உறிஞ்சாததைச் சேர்த்து உறிஞ்சிற்று.
அவள் கண்களை மூடிக்கொண்டாள். மார்பின் குத்துவலியெல்லாம் அந்த சின்ன இதழ்களின் ஸ்பரிசத்தில்  கரைந்து போனது.
இனிமே உன்னை விட்டுட்டுப் போகமாட்டேன் என்று அதன் நெற்றியில் முத்தமிட்டு உறுதி அளித்தாள்.
எங்கே போயிருந்தா பெத்தவ பால்குடிக்கிற சின்னக் குழந்தையை விட்டுப்புட்டு?
அக்கம்பக்கத்து கேள்விகளையெல்லாம் அம்மா சமாளிக்கட்டும் என்று அவள் தன்னுள் ஆழ்ந்திருந்தாள்.
புருஷன் என்ன செய்யறான்?
யாரு கண்டா? குழந்தைப் பிறந்தப்புறம் காணாம போயிட்டான்.
அடப்பாவி. இதுவே சின்னப்பொண்ணாட்டம் இருக்கு?
 ஆமாம். பதினைஞ்சு வயசு. என்னவோ உலகம் கெட்டுக்கடக்கு ஒருத்தன் கையிலே ஒப்படைச்சா நல்லதுன்னு நினைச்சேன். ஏமாந்துபோனேன்.
திரும்பி வராமியா போவான்?
அவள் அதிர்ந்து அலங்க மலங்க விழித்தபடி குழந்தையை அணைத்துக்கொண்டாள். அந்த சாத்தியம்கூட இருக்குமோ? அந்த நினைப்பே நடுக்கத்தை ஏற்படுத்திற்று.

பாப்பா நல்லா ஆயிட்டா இனி வீட்டுக்குப் போகலாம் என்றார் டாக்டர்.
நம்பத்தான் முடியல்லே. கடவுள்தான் காப்பாத்தினார் என்றாள் அம்மா.  
வீட்டு வாசலில் ஒரு நாய் அமர்ந்திருந்தது. அவர்களைக்கண்டதும் துள்ளிக்கொண்டு அருகில் வந்தது. அவள் பயந்துபோய்
பின்னுக்கு நகர்ந்தாள்.
இது ஏதுமா யார் நாயி இது?
நம்ம நாயின்னு வெச்சுக்க என்று அம்மா சிரித்தாள். நீ போனதிலேந்து எங்கேயிருந்தோ வந்து சேர்ந்திருக்கு. வீட்டுக்கும் குழந்தைக்கும் காவலாட்டம் உட்காந்திருக்கு. ஒண்ணும் பண்ணாது.
வேட்டை நாயாட்டம் இருக்கு?
அப்படித்தான் இருக்கு. ஆனா நம்மை ஒண்ணும் செய்யறதில்லே. பயப்படாதே. ரெண்டு வேளை சோறுதான் தர்றேன்.

என்னவோ எனக்கு பயமாயிருக்கு.
 சீச்சீ ஒண்ணும் பயமில்லே.
என்ன பேரு?
பிச்சைன்னு வெச்சிருக்கேன்
நாய் தேமேனென்று இருந்ததால் அவள் சமாதானமகிப்போனாள்.
இரவின் தனிமையில்  திட்டம் போட்டாள்.
அம்மா வயற்காட்டு வேலை கெடைச்சாலும் செய்யறேன். எங்கேயாவதுமரத்திலே தூளி கட்டி பாப்பாவைப் படுக்க வைக்கலாம். வெல்லம் செய்யற கருப்பட்டி ஃபாக்டரியிலே கூட வேலை கிடைக்கும் இல்லேம்மா?
 கிடைக்கும்தான். ஆனா கூலி பெங்களூர் மாதிரி கிடைக்காது.
பரவாயில்லே. எத்தனைக் கஷ்டப்பட்டாவது இங்கயே பொழைச்சுக்கலாம்.
அடேயப்பா , ஒரே வாரத்து பெங்களூர் வாசத்திலே இத்தனை தெம்பு வந்துடுச்சா?

அரைக்கூலியோ முக்காக் கூலியோ இருவருக்கும் வேலை கிடைத்தது. கூடவே நாயும் வரும் .தூளியில் இருந்த பிளைக்குக் காவலாய் அகலாமல் உட்கார்ந்திருக்கும். இது எங்கிருந்து வந்தது என்று அவளுக்கு அதிசயமாக இருக்கும்.பிச்சை . சாமி போட்ட பிச்சை. வேடிக்கை.
 இடையில் அஞ்சலை போன் செய்தாள். எப்ப திரும்பி வர்றே?
இங்கயே இருந்துடறேன்கா .
நீ ஒரு சரியான கிறுக்கு. இங்க கிடைக்கிறதிலே கால்பங்குகூட உனக்கு அங்க கிடைக்காது.
தெரியும்பாப்பா வை விட்டு வரமுடியாதுக்கா.
அஞ்சலை பிறகு பேசவில்லை.

வெல்லக்கட்டிகளை உருட்டி கணக்கெடுத்து கூடையில் அடுக்கும்போது ஆத்தா ஓடி வந்தாள். அடீ உன் புருஷன் வந்துகிட்டிருக்கான். உன்னைக்கூட்டிட்டுப் போக வர்றதா சொல்றானாம்.
அவள் விருக்கென்று நிமிர்ந்தாள். அடிவயிற்றைச் சுற்றிக்கொண்டு ஒரு பீதி கவ்வியது. ரத்த நாளமெல்லாம் உறைந்து நடுக்கம் கண்டது. தன்னைப்போல் கைகள் கழுத்தைத் தடவின.
பெண்கள் கும்பல் சந்தோஷமாக ஆர்ப்பரித்தது. நல்ல காலம் பிறக்கப்போவுது புள்ளே. அவன் கூப்பிட்டான்னா சந்தோஷமா போயிறு.
என்ன இருந்தாலும் குழந்தைமேல பாசமில்லாம போகுமா.
பாசமா, கொழந்தெ முகத்தைக்கூட பாக்காம போன ஆள் அது.

போடீ, நல்ல  சேதி கேட்டு ஓடுவியா இடிச்ச புளி கணக்கா உக்காந்திருக்கே.

அவனைக்கண்டாலே இது நடுங்கும்.

அடீ நீ பயந்தேன்னு வெச்சுக்க , அவன் அதிகமா துள்ளுவான். அவன் ஜெயிச்சதா ஆயிறும். பயப்படாம காரியத்தை சாதிக்கணும்.

எப்படி? இவர்களுக்கு என்ன தெரியும்?

அவள் மெல்ல எழுந்தாள். பட்டறையின் வாசலில் நின்று கண்களைத் துழாவியபோது அவன் மரத்தடிக்கு வருவது தெரிந்தது. தூளிக்கு வந்து விட்டான். எப்போதும் இருக்கும் நாய் எங்கே போயிற்று? எங்கே அவன் தூளியிலிருந்து குழந்தையை எடுத்துவிடுவானோ என்று அவள் பதைப்புடன் ஓடினாள்.
அவன் அவளையே உற்றுப் பார்த்தபடி நின்றான். அவள் அவசரமாகத் தூளியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்தாள்.

எங்கிட்ட குழந்தையைக் குடு. நா எடுத்திட்டுப் போறேன்என்றான் அவன் அதட்டலாக.
எதுக்கு?’
பொட்ட புள்ளையைப் பெத்திருக்கியே எப்படி பாத்துக்கறதுன்னு நினைச்சே . தமிழ் நாட்டிலே கவர்மெண்டு ஆஸ்பத்திரியிலே வெச்சிருக்கிற தொட்டில்லே போடப்போறேன். அதுக்கப்புறம் நா உன்னைக் கூட்டிட்டு போறேன்.
அவள் திகிலுடன் அவனைப் பார்த்தாள். அவன் அருகில் வந்துவிட்டான்.
நா குடுக்க மாட்டேன்.
குடுடீன்னா!
நா மாட்டேன். உன்கூடவும் வரமாட்டேன்.
அடச்சீ கழுதை. நா உன் புருஷன்னு நினைவு வெச்சுக்க.
அவன் அவள் கையிலிருந்து பிடுங்க வந்தான்.
அவள் பலம்கொண்டமட்டும் கத்தினாள். பிச்சை!
இனிமேல் எனக்கு விடுதலை இல்லை என்று அவள்  பயத்துடன் கண்ணை மூடிக்கொண்டாள்.இந்த மிருகத்துடன் மறுபடியும்  வதைபடப்போறேன்
அவன் அலறுவது கேட்டது . அவள் கண் திறந்த போது பிச்சை அவன் மேல்  பாய்ந்து பாய்ந்து எகிறிற்று. அவன் வேஷ்டியெல்லாம் நழுவ கீழே புறண்டு அலறினான். அது அவனது கழுத்தை பதம் பார்த்தது. அவள் விழிகள் பிதுங்கப் பார்த்தாள். அவனது கழுத்திலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. கழுத்தில் அங்கங்கே பல் பதிந்திருந்ததுபிறகு தொடை, அக்குள் புட்டம் ...அவன் கதறக் கதற..
அவள் குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே ஓடி வந்தாள். மார்பு படபடத்து மேனியெல்லாம் விதிர்த்தது. பிச்சை எப்போது வெறி அடங்கி ஓடிப்போனது என்று அவளுக்குத் தெரியாது.
. அவனைச் சுற்றி கும்பல் நின்றது. கொலைகார நாயை ஊரெல்லாம் தேடியது.
அவள் கண்களில் இருந்து ஆறாய் நீர் வழிந்தவண்ணம் இருந்தது.

அம்மாவும் ஊர்சனமும் அங்கலாய்த்தவண்ணம் இருந்தை கவனிக்காமல் அவள் ஏதோ கிறக்கத்தில் இருந்தாள்.
அன்று இரவு  அஞ்சலை போன் செய்தாள். என்ன விஷயம் என்று கேட்பதற்குமுன் , ‘அக்கா நீ கடவுள் இருக்கார்னு சொன்னியே, நா இன்னிக்கு மெய்யாலுமே பாத்தேன். நாயா வந்தாரு.என்றாள்.
அஞ்சலை சற்று பொறுத்து சொன்னாள்.
நீ ஒரு கிறுக்கு. கடவுள் என்கிறதெல்லாம் பொய்யி.
என்னக்கா அப்படி சொல்றே?’
அஞ்சலை அழுவதுபோல் இருந்தது. என் வீட்டுக்காரரு இன்னொரு பொம்பிள்ளையோடு பொயிட்டாரு.
என்னது?’
ஆமாம் , நம்பவே முடியல்லே, இப்படி ஏமாத்துவாருன்னு.
அவளுக்கு எசகு பிசகாகச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு, ‘இங்க வந்துரு அக்கா . சேர்ந்து பொழெக்கலாம் அவங்களுடைய தொந்திரவு இல்லாம. என்றாள்.
அதான் நானும் நினைக்கிறேன். எனக்கு இங்க இருக்கவேபிடிக்கல்லே.

அன்று இரவு பேய்கள் நாய்கள் துரத்தவில்லை. அவள் நிம்மதியாகத் தூங்கினாள்