Thursday 5 March 2015

நிர்பயாக்களின் ஆவிகள்





                        


க்ளேட்டன் வீட் வில்லியம்ஸ் என்று ஒரு அமெரிக்க தொழிலதிபர்  1990 இல்   டெக்ஸஸ் மாநிலத்தின் கவர்னர் தேர்தலுக்கான  போட்டிக்கு ஒரு பெண்ணை எதிர்த்து நின்றார். அவருக்கு இருந்த பணபல செல்வாக்கில் நிச்சயம் வென்றிருப்பார்.   தேர்தலுக்கு முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட 20 புள்ளிகள் முன்னணியில் இருந்தார். ஆனால் பிரச்சார நாட்களின்போது அவரது நாக்கில் சனி வந்து அமர்ந்தான். தனது பண்னையில் சிலருடன் பேசும்போது மோசமான பருவ நிலையை ரேப்புடன்- பாலியல் பலாத்காரத்துடன், ஒப்பிட்டார். நம்மால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை என்றால் ,
[ பாலியல்பலாத்காரத்தைப்போல-] சும்மா படுத்து அதை அனுபவிக்கவேண்டியதுதான்! என்றார்.  [If it is inevitable, just relax and enjoy it!’]  பெண்ணியவாதிகளும் பொதுஜனங்களும் கண்டனக்குரல் எழுப்ப, உள்ளூர் பத்திரிக்கைகள் அவரை சைத்தான் வில்லியம்ஸ் என்று கார்டூன் வரைந்தன. ஹாஸ்யம் என்று நினைத்த திமிர்பிடித்த வார்த்தைகளினால் தேர்தலில் தோற்றார்.  

க்ளேட்டன் சொன்ன வாக்கியம் இன்று மீண்டும் எனக்கு நினைவுக்கு வருவதற்குக் காரணம்  கிட்டத்தட்ட இதே கருத்தை நிர்பயா ரேப் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் முகேஷ் சிங் என்ற  குற்றவாளி  [குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர்களில் ஒருத்தன்]சொல்லியிருக்கிறான்- லெஸ்லீ உட்வின் என்ற ப்ரிட்டிஷ்  பட இயக்குனர்  இந்தியாவின் மகள் என்ற தலைப்பில் இயக்கியிருக்கும் ஒரு ஆவணப்படத்தில்.  மார்ச் 8-ம் தேதி வெளியிட இருந்த படத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்திருக்கவேண்டும். முட்டாள் பெண் சும்மா இருந்திருந்திருந்தால்[ அதாவது இணங்கியிருந்தால்] நாங்கள் கொன்றிருக்கமாட்டோம்.எந்த நல்ல பெண்ணும் இரவு ஒன்பது மணிக்குமேல் வெளியே சுற்றமாட்டாள் அந்தப் பெண்தான் பாலியல் பலாத்காரத்துக்குப் பொறுப்பு. ஏனென்றால் அவளது செய்கையால்., உடையால் ஆண்களை செய்யத்தூண்டியது அவளது தவறு, என்கிறான் கொஞ்சமும் குற்ற உணர்வில்லாமல்.  குற்றம் சாட்டப்பட்டவர் எல்லோருக்குமே, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐவருக்குமே தாங்கள் செய்தது தவறு என்று தோன்றியதற்கான அடையாளம் கொஞ்சமும் இல்லை என்கிறார் லெஸ்லீ.

  ‘நாங்கள் மட்டும்தான் இப்படிப்பட்ட குற்றங்களைச் செய்திருக்கிறோமா. எல்லாரும்தான் செய்கிறார்கள்என்றிருக்கிறார்கள் நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்கும் மற்றவர்கள். 
அவர்கள் பேச்சிலிருந்து ஒன்று புரிந்தது என்கிறார் லெஸ்லீ.  ‘அவர்களது மதிப்பீட்டில் பெண்கள் ஒரு பொருட்டே இல்லை. ஆண்கள் விதித்திருக்கும் கோட்பாடுகளைப் பெண்கள் மீறினால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.‘  அவர்களுக்காக  வாதாடும் வக்கீல் சர்மாவும், பாலியல் வன்முறைக்கு ஆளான நிர்பயாவே குற்றவாளி என்கிறார். இரவு ஒன்பது மணிக்குமேல் ஒரு பெண் ஏன் வெளியில் செல்கிறாள்? அதுவும் ஒரு ஆண் சிநேகிதனுடன்? பெற்றோர்கள் ஏன் கண்டிக்கவில்லை? ‘என்கிறார். 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் [2012- டிசெம்பர்]  தில்லியில் மிக பயங்கரமான பாலியல் வன்முறைக்கு ஆளான அந்தப் பெண்ணுக்கு ஒரு உருவகப் பெயர் சூட்டப்பட்டது. நிர்பயா என்று - பயமற்றவள் என்கிற பொருளில். அந்தப் பெயரே பாலியல் வன்முறைகயால் பாதிக்கப்பட்டவருக்கானக் குறியீடானது. 

அமெரிக்க தொழிலதிபரும்  அரசியல் வாதியுமான க்ளேட்டன் வீட்டின் திமிர் பேச்சுக்கும் வேலையில்லாத  சோதாவாக வாழ்ந்த ஏழை இளஞன் முக்கேஷ் சிங்கின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. இருவருக்குள்ளும் இருப்பது  ஒரு பொதுவான பால் இனத் திமிர்.  இந்திய ஆண்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றோ இந்தியப் பெண்களே இலக்காகிறார்கள் என்றோ சொல்வதற்கில்லை.  இந்தப் படத்தை எடுக்க நினைத்ததற்குக் காரணமே லெஸ்லீ உட்வின்னும் இதே போன்ற பாலியல் வன்முறைக்குப் பதினெட்டு வயதில் ஆளானதும் அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு வாய்மூடி இருந்ததனால் ஏற்பட்ட, இது நாளும் அனுபவித்த குற்ற உணர்வுமேதான். நிர்பயா விபத்தையொட்டி இந்திய தலை நகரில் ஏற்பட்ட ப்ரும்மாண்ட எதிர்ப்பும் கோபமும் அவரை உலுக்கிவிட்டதாகச் சொல்கிறார். உடனடியாக இதைப் பற்றின, பாலியல் வன்முறையாளர்களின் மனனஇயலை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் அவர்களை சந்தித்து ஆவணமாக்கவேண்டும் என்கிற ஆவேசத்துடன் இந்தியா வந்ததாகச் சொல்கிறார்.

படம் தயாரிக்கும்போது தனக்குள் மாபெரும் மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். விஷயம் என்னைவிட முக்கியமானது என்று உணர்ந்தேன். நான் அதுநாள் வரை அனுபவித்த அவமானம் என்னைச் சேர்ந்ததில்லை நான் கௌரவமாகத் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்று புரிந்தது. சொந்த அனுபவத்தினால் திஹார் சிறையில் தான் பார்க்கப்போகும் குற்றவாளிகளை சந்திக்கும்போது கோபத்தில் வெடித்துவிடுவோமோ என்று அவர் பயந்தார். ஆனால் அவர்களுடன் வார்த்தையாடும்போது மிதமிஞ்சிய பரிதாபம் ஏற்பட்டதாகச் சொல்கிறார். பரிதாபம் அவர்களைக் கண்டல்ல. நாம் வாழும் சமூகத்தில் பெண்ணின் நிலை எத்தனைக் கேவலமாகிப் போனது என்கிற துக்கம்தான் அவரை ஆட்கொண்டது. 

மீண்டும் மீண்டும் அந்த விஷயம் விவாதப்பொருளாகிறது. மிக முக்கியமாக மார்ச் 8-ம் தேதி நெறுங்கிவிட்டால், அப்போதுதான் பெண் என்கிற ஒரு ஜீவன் கண்ணில் தென்படுவதுபோலவும் அவளுக்கு இழைக்கப்படும் மிக மோசமான வன்முறைகள் நினைவுக்கு வருவதுபோலவும், பேசப்படுகிறது.  நமது கலாச்சார தார்மீகக் கோட்பாடுகளை மீள் வாசிப்பு செய்யவேண்டிய , புரட்டிப்போடவேண்டிய அவசர காலகட்டத்தில் இருப்பதை சமூகம் உணரவில்லை. பள்ளிகளில் gender sensitization என்கிற பொருளை துல்லியமாக உணர்த்தக்கூடிய பாடம் இணக்கப்படவில்லை.    யார் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் அது தலித் பெண்ணோ தில்லியின் மத்திய வகுப்பு உயர் ஜாதிப் பெண்ணோ , குற்றம்  ஒன்றுதான். தண்டிக்கப்படவேண்டியது. துரிதமாக. 

இப்போது பாலியல் வன்முறை நிகழ்வுகளுக்கு அதிக வெளிச்சம் கிடைப்பதும் அதைப்பற்றின விவாதம் நடப்பதும் நல்லதுதான். நமது சமூகம் பாசாங்குத்தனம் மிக்கது. இந்த ஆவணப்படத்தை  வெளியிட தடை விதித்திருக்கிறது அரசு அதன் வெளிப்பாடாக. இந்தியாவுக்கு சங்கடமாம். நமது பண்பாடுக்கு இழுக்காம்! நமது பண்பாடும் , மானமும் கௌரவமும் காக்கப்படவேண்டிய பொறுப்பு பெண்கள் கையில் மட்டும்தான் என்று நம்பும் ஐதீகம் இருக்கும் வரை மாற்றம் வருவது சாத்தியமில்லை.


No comments:

Post a Comment