Sunday 8 March 2015

கொள்ளை நோய்



                                 

இந்திய ஆண்களை ஒரு நோய் பீடித்திருக்கிறது.[யாரை வேண்டுமானாலும் தாக்கக்கூடியது என்பதால் பொதுவாக ஆண்கள்என்று குறிப்பிடவேண்டியிருக்கிறது, ஸாரி.]  பயங்கர கொள்ளை நோய். நாடு முழுவதிலும் அதைப் பற்றின அபாயச் சங்கு ஒலிக்கிறது. அத்துடன் மரண ஓலங்கள் . அழுகுரல்கள் . ஆனால் விசித்திரம். மரணிப்பவர்கள், அழுபவர்கள் அவர்கள் இல்லை. நோய் அவர்களை ஒன்றும் செய்யவில்லை. மாறாக அவர்களது தெம்பும் திமிரும் கூடுகிறது. பலியானவர்கள் அவர்களது சக ஜீவிகளான பெண்கள். தெற்கு ஆஃப்ரிக்காவில்  சமீபத்தில் வானொலியில் நான்கு நிமிடத்துக்கு ஒரு அபாயச் சங்கு விடாமல் ஒலித்ததாம் அங்கு நடக்கும் பாலியல் வன்முறையின் நிகழ்வைக் குறிக்க. இங்கு நான்கு விநாடிக்கு ஒரு சங்கு ஒலிக்கவேண்டியிருக்கும்.   

 புண்ணிய பாரத மண்ணின் வரலாறு ஆணின் வரலாறு.   அவனது சிந்தனை, அவனது சட்டங்கள், அவன் வரைந்த கோடுகள், எல்லைகள் ,அவனது வீர விளையாட்டு--இத்யாதி  கொண்டது. பெண் அலங்காரமானவள். ஆளப்படவேண்டிய நுகரப்படவேண்டிய பொருள்.    பாலியல்  பலாத்காரம் ஒரு வன்முறைச் செயல்  என்று யார் நினைத்தார்கள்?ஆண்களின் பௌருஷத்தை வெளிப்படுத்தும் லட்சணம் அல்லவா அது

இன்றும், இந்த நொடியிலும் அப்படிப்பட்ட நினைப்பில்தான் இந்த சமூகம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு வித்தியாசம். விழிப்புணர்வு கொண்ட பெண்களும் பரபரப்பூட்டும் செய்திக்கு ஆலாய் பறக்கும் ஊடகங்களும் உரத்துக்குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கின்றன. தில்லியில் சென்ற டிசம்பர் மாதத்துக் குளிர் மிகுந்த ஒரு இரவில்  நண்பருடன் பேருந்தில் ஏரிய அந்த முகமறியா யுவதி, நிர்பயா என்று குறியீட்டுப் பெயர் கொடுக்கப்பட்ட பெண்ஆறு போக்கிரிகளால் கொடூரமாக  பாலியல் வன்முறைக்கு ஆளாகிப் பரிதாபமாக இறந்த சம்பவம்  இந்திய பெண்ணின் வரலாற்றில் ஒரு மைல் கல். அதுவரை பேசாமடந்தையராய் இருந்த சாதுப் பெண்களையும் சில ஆண்களையும்கூடத்  தெருவில் இறங்கி  வந்து கோஷமிடும் அளவுக்கு உசுப்பிவிட்ட  அதிசயத் தருணம். தில்லி அரசையும் மத்திய அரசையும் கிடுகிடுக்க வைத்த அதிசயம். மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்துக்கு இளைஞர்களும் யுவதிகளும் தயாரானதுபோல இருந்தது.  அதற்கு முன் பாலியல் வன்முறை ஏதும் நிகழ்ந்ததில்லையா? தினமும் எத்தனை எத்தனை ஏழைப் பெண்கள், பழங்குடி, தலித் பெண்கள் கிராமங்களில் மலைகளில் நகரின் சந்துகளில் , குடிசைகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அவை எழுப்பாத ஆவேசம் இப்போது ஏன் ஏற்பட்டது?வரலாற்றில் சில தருணங்கள் அத்தகையவை. நீரு பூத்த நெருப்பு ஒரு பொறிபட்டு பற்றிக்கொள்ளும் தருணம். அரபு வசந்தம்  கிளர்ந்து எழுந்ததுபோல. காட்சி ஊடகங்கள் போட்ட வெளிச்சத்தில்  நிர்பயா அனுபவித்த அவமானமும் துன்பமும் மரணமும் தங்களுக்கு நேர்ந்த ஒன்றாக பெண்கள் நினைத்தார்கள். தங்கள் மகள்களுக்கு நேர்ந்ததாகத் தாய்மார்கள் பதைத்தார்கள். இந்த சமூகம் பாதுகாப்பானது இல்லை என்று அவர்கள் அனுபவத்தில் உணர்ந்தவர்கள். 

நிர்வாகத்தின் மெத்தனத்தை , சமூகத்தின் ஆணாதிக்க  அசட்டையை உலுக்கும் தருணம் இது என்று நம்பிக்கை ஏற்படுத்திய நாட்கள் அவை. மதத் தலைவர்களின், சில அரசியல்வாதிகளின் மிக மோசமான முகங்களைக் காண்பித்த அவல நாட்களும் கூட. பலாத்காரத்துக்கு ஆளானவளும் குற்றம் சாட்டப்படவேண்டும் என்கிற அர்த்தத்தில் விடாமல் உளறிக்கொண்டிருந்தார்கள். பெண்களை அதிக ஆத்திரம்கொள்ளச் செய்தார்கள். சுருண்டு விழித்த  போலீசும் நிர்வாகமும் ஒன்றையொன்று குற்றம் சாட்டின. குற்றவாளிகள் பிடிபட்டார்கள். பாராளுமன்றம் அமளிதுமளி பட்டது. இந்தியா கேட்டில் கண்விழித்து கோஷமிட்டவர்கள் சோர்ந்து போனார்கள். இதற்கிடையில் நிர்பயா சிங்கப்பூரில் இறந்து போனாள். பாலியல் வன்முறைச் சம்பவங்கள் எப்போதும்போல நிகழ்ந்தன. ஊடகங்கள் வேறு செய்திக்குத் தாவின.

பாலியல் வன்முறைக்கு அதிகக் கடுமையான சட்டம் இயற்ற பாராளுமன்றம்  தயாராகியிருந்தது.. கேவலம் என்ன தெரியுமோ? மேலவையின் துணை சபாநாயகர் பி.ஜே.குரியன்  ஒரு கேங்க் ரேப்குற்றச்சாட்டில் சிக்கியிருந்தவர். கேரளத்தில் ஒரு இளம்பெண் 40 நாட்களுக்கு விடாமல் பலரால் சில ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்முறைக்கு ஆளானாள். அந்தப் பலரில் இந்தக் குரியனும் ஒருத்தர் என்றாள். குரியனுக்கு வெட்கம் இருந்ததாகத் தெரியவில்லை. நாற்காலியில் பிசினாய் ஒட்டிக்கொண்டிருந்தார். காங்கிரெஸ் கட்சித் தலைவி சோனியா மகளிருக்காகக் கரைபவர் என்று ஒரு புரளி உண்டு. இப்படிப்பட்ட நிர்வாகமும் அரசியலும் இருக்கும்போது பெண்கள் ஆயுதப் புரட்சியில்தான் இறங்கவேண்டும். 

தமிழ் நாட்டில் பெண்களைத் தாக்க ஒரு புதிய ஆயுதத்தை  ஆண்கள் எடுத்திருப்பது இப்போதைக்கு நமது  சமூகத்தில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்கிற நிராசையை ஏற்படுத்துகிறது. தங்கள் காதல் மறுக்கபட்டால்  அசட்டுப் பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆண்கள்தாங்கள் காதலிக்கும் பெண்ணின் முகத்திலோ உடம்பிலோ ஆசிட்டை ஊற்றிக் கொல்கிறார்கள்.   எனக்குக் கிடைக்காத நீ எவனுக்கும் வேண்டியதில்லை என்கிறானா சினிமா பாணியில் ; அல்லது என்னை நிராகரிக்கும் அளவுக்கு உனக்கு அத்தனை கர்வமா, திமிரா, என்கிறானா அந்த உதவாக்கரை ?. அப்படிப்பட்ட கொலைவெறிக்கு ஒரு வினோதினி பலியாகி இரெண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. இப்போது ஒரு வித்யா. இன்னும் எத்தனைப் பெண்கள் இத்தகைய மூர்க்கத்துக்கு பலியாவார்கள்

இத்தகைய செய்திகள் எல்லாம்  ஆண்சமூகத்தை ஏன் கோபப்படுத்துவதில்லை? தெருவில் இறங்கி[ மார்ச் 8 அன்றாவது?]  ஏன் கோஷமிடுவதில்லை.? பெண்கள் படும் அவமானங்களுக்கு அவர்களே காரணம் என்றும், தமது மதத்தையும் கலாச்சாரத்தையும் ரட்சிக்கவேண்டிய பொறுப்பு அவர்களைச் சேர்ந்தது [அவர்களை மட்டும் !] என்றும் நீட்டி முழக்கும் மத/ அரசியல் தலைவர்கள் இருக்கும்வரை இந்த சமூகத்தின் பொதுபுத்தியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி ஏதும் உறைக்காது.    குற்றமிழைப்பவர்களை  சட்டம் உடனுக்குடன் கடுமையாக தண்டிக்காததே அவர்களது திமிருக்கும் அதிகரிக்கும் மூர்க்கத்துக்கும் காரணம் என்று உணர்ந்து  அவசர கதியில்  நிர்வாகங்கள் இயங்காமல் இருக்கும்வரை குற்றங்கள் தொடரும்.          


1 comment:

  1. Dear Pankaja

    A very nice and awakening blog item. I will send to email fris who can read Tamil

    regards

    G Viswanathan

    ReplyDelete