Tuesday, 19 May 2015

அரசு விளம்பரங்கள் இனி யாரை முன்னிறுத்தும்?

சென்னை அண்ணா விமான நிலையத்திலிருந்து  நகரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்ததும் அதில் அமர்ந்திருந்த மூதாட்டி கண்களை சோர்வுடன் மூடிக்கொண்டார். அவரது கருணைமிகுந்த முகத்தின் சுருக்கங்களில் உலகத்துத் துன்பங்கள் எல்லாம் புதைந்திருந்தது போல இருந்தது. அந்த சின்ன மெலிந்த வற்றிய உடம்பை எளிய வெள்ளை பருத்திச் சீலை சுற்றியிருக்க மெல்லிய உதடுகள் ஏதோ பிரார்த்தனையை முணுமுணுத்தபடி இருந்தது.  அரசின் வி ஐ பி விருந்தினரை அழைத்துசெல்ல வந்திருந்த பெண் அதிகாரி அந்த மூதாட்டியுடன் பேசவேண்டும் என்ற தனது அதீத ஆவலை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். பேசாமல் இருப்பதும் ஒரு விதத்தில் நல்லதுதான். அன்று  கவலைப்பட வேறு விஷயங்கள் இருந்தன. விருந்தினரை விருந்தினர் மாளிகையில் இறக்கி விட்டதும் கவனிக்கவேண்டிய பணிகள் ஏராளமாக இருந்தன.
திடீரென்று மூதாட்டி கண்களைத்திறந்து ஜன்னல் வழியே பார்வையை ஓட்டினார். கண்களை வியப்புடன் மலர்த்தி, ‘அதெல்லாம் என்ன டியர்?’ என்றார்.
, அவை cut-outs மதர்என்றார் அதிகாரி. எங்கள் முதல்வரின் கட் அவுட்டுகள்.
மதர் தெரெஸா கழுத்தை வளைத்து ஆகாசத்தைப்பார்த்தார். முதல்வரின் தலை மேகத்தில் மறைந்திருந்தது.
கடவுளே!என்றார் மதர் தெரஸா அதிர்ச்சியுடன். எத்தனை பெரிசு!
நீங்கள் இந்த மாதிரி பார்த்ததில்லையா?’
சாலை நெடுகிலும் அணிவகுத்திருந்த கட் அவுட்டுகளை பார்த்தபடி மதர் சொன்னார். உலகத்தில் எங்குமே பார்த்ததில்லை.
அதான் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டில் இவை இல்லாவிட்டால்தான் மக்களுக்கு வியப்பாக இருக்கும் இது இங்கு மிக சாதாரணம், சினிமா விளம்பரமோ , அரசியல் தலைவர்களுக்கு தெரிவிக்கும் மரியாதையோ  கட் அவுட் வைக்கும் கலாச்சாரம் . கட் அவுட்டின் அளவும் மிக முக்கியம் . உங்கள் தலைவருக்கு நீங்கள் காண்பிக்கும் விசுவாசதின் அளவுகோலாக அது பார்க்கப்படும்.அதிகாரி சிரித்துக்கொண்டே சொன்னார்.
அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மதர் கேட்டார் -ஒவ்வொரு கட் அவுட்டுக்கும் எத்தனை செலவாகும்?”
எனக்குத் தெரியாதுஎன்றார் அதிகாரி ஏமாற்றத்துடன்.  “ சில ஆயிரம் ரூபாய் ஆகலாம். ஆனால் தலைவிக்குத் தனது விசுவாசத்தைக் காண்பிக்க தொண்டனுக்கு எந்தச் செலவும் பெரிசில்லை!மதரின் முகத்தில் இருந்த அதிர்ச்சி மறையவில்லை. ஒரு கட் அவுட் செலவில் எத்தனை ஏழைகளுக்கு சாப்பாடு போடலாம்?’ என்று அவர் முணுமுணுத்ததைக்கேட்டு அதிகாரிக்குக் கவலை ஏற்பட்டது. அன்று மிகப் பெரிய விழாவிற்கான ஏற்பாடு பல லட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடாகி இருந்தது. ஜெயலலிதாவின் “ Vision 2000” - பெண்கள் முன்னேற்றத்திற்கான முதல்வரின் தொலைதூர பார்வைகொண்ட  [ இன்னும் ஐந்தாண்டு இருந்தன 2000 த்துக்கு] திட்ட அறிவிப்பு மதர் தெரஸாவினால் தொடங்கப்படவேண்டியிருந்தது. அரங்கத்தில்   இதெல்லாம் தண்டச்செலவு என்று இந்த மூதாட்டி கடுப்பு தெரிவித்தால் என்ன செய்வது? நல்ல வேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. உலக ஞானம் மிக்கவரான மதர் முதல்வரின் செயலை கட்வுட் அளவுக்கு மேல் புகழ்ந்து எல்லோர்  மனத்தையும் குளிர்வித்தார்.  ஊர் திரும்ப விமான நிலையத்துக்குப் பயணித்தபோது வெளியில் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டார்.
முதல்வர்களின் புகைப்படங்களை  மாநிலங்கள் அரசு விளம்பரங்களில் இனி உபயோகிக்ககூடாது என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.  கட் அவுட்டுகளைப்பற்றி சொல்லாமல் விட்டது தமிழக அரசியல் கட்சிகளுக்கு நிம்மதி என்றாலும்  ஆளும் அரசு பரிதவித்துப்போகும் என்பதில் சந்தேகமில்லை. அங்கிங்கென்னாதபடி அரசின் சகல விளம்பரங்களிலும், பால்பைகள், ரேஷன் பைகள், நீர் பாட்டில்கள் , பேருந்துகள் கட்சித்தொண்டர்களின் மஸ்லின் சட்டைப்பாக்கெட்டுகள் , பெண்டெண்ட்டுகள் என்று  சகட்டு மேனிக்கு ஜெயலலிதாவின் புகைப்படத்தை போட்டு அலங்கரித்துத் தங்கள் விசுவாசத்தைப் பறைசாற்றிக்கொண்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அடிப்படைத் தொண்டர்கள் இனி என்ன செய்வார்கள்? அப்படித் தலைவர்களின் படத்தை அரசு விளம்பரங்களில் போடுவது, பொது மக்களின் வரிப்பணத்தை விரயம் செவது மட்டுமல்லாமல், ஆபத்தான் தனிநபர் வழிபாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் செயல் என்கிறது உச்சநீதிமன்றம். அடேயப்பா, இப்போதுதான் புரிந்ததா? எங்களூரில் அது இல்லாமல் அரசியல் செய்யவே முடியாது  என்பது உங்களுக்குத் தெரியாது. அதுதான் வண்ணமூட்டுவது. சுவாரஸ்யமற்ற அரசியல் அரங்கை பளபளப்பூட்டி மயக்கத்தைத்தருவது,.
அந்த அதிகாரி சரியாகத்தான் சொன்னார். தனி நபர் ஆராதனை தமிழர்களின் கலாச்சாரம். நமது ரத்தத்தில் ஊறிப்போன நிலப்ரபுத்துவ மரபு. நமக்கு யாரையாவது ஆராதித்தே பழக்கம்.அமைச்சர்கள் தலைவியின் காலில் விழுவார்கள். அரியாசனம் கிடைத்தாலும் தலைவி அமர்ந்த இடத்தில் அமர்வது அபச்சாரம் என்று காட்டுக்குச் சென்ற ராமன் திரும்பும்வரை காத்திருந்த பரதன்போல் காத்திருக்கும் அதிசய விசுவாசிகளைப்பற்றி மதர் தெரஸாவுக்குப் புரியக்கூடப் புரியாது. கடவுளோ  ஆண்டானோ நெடுஞ்சாண்கிடையாக நமஸ்கரித்தே  நமக்கு வழக்கம். அதை நிர்மூலமாக்கும்விதமாக வேறு எந்த மாநிலத்திலும் தோன்றாத  சுமரியாதை இயக்கம் என்ற  ஒரு சமூகப் புரட்சி இங்கு தோன்றியது மாபெரும் அதிசயம். அது ஒரு அதிசய மனிதரால் சாத்தியமாயிற்று. ஆனால் புரட்சிப்பிரச்சாரத்தின்போது பெரியார் சொல்லத் தவறவில்லை. நான் சொல்வதைக் கண்ணைமூடிக்கொண்டு நம்பாதீர்கள் .சுயமாக யோசித்து முடிவுக்குவாருங்கள்.பெரியாரின் வழித்தோன்றல்களுக்குத் தெரியும், ஒரு அரசியல் கட்சியை நடத்தும்போது தொண்டர்களுக்கு அத்தகைய சலுகைகள் இருக்கமுடியாது என்று. கட்சிக்கு ஒரு தலைவரோ தலைவியோ கண்டிப்பாகத் தேவை. அவரது தலைமைக்கு எந்த சவாலும் இல்லாத பலத்தோடு. ஜனநாயக போர்வை போர்த்தினாலும்  தலைமையின் சொல்லுக்கு மறுமொழி இருக்கக்கூடாது.  வெகுஜன மக்களை ஈர்க்கும்  யுக்தி அது.அவர்களுக்கு அத்தகைய பிம்பம்தான் பாதுகாப்பு உணர்வைத் தரும். ஆண்டானுக்கும் அடிமைக்கும் இடையே இருந்த தூரம் மக்களுக்கும் தலைவருக்கும் இடையே ஏற்டுவது தவிர்க்கமுடியாதது. இது உலகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்ட விஷயம். தலைவரின் பண்புகள் பிரமிப்பையும் பயபக்தியையும் விளைவிக்கும் விதத்தில் தலைமையின் பலம் மிகைப்படுத்தப்படவேண்டும்.அளவுக்கு அதிகமாக ஊதிப்பெருக்கப்படவேண்டும். இலவசங்கள் அரசு   செலவில் அளிக்கப்பட்டாலும் வாங்கிக்கொண்டவரின் இதயத்திலும் இல்லத்திலும் என்றென்றும் வீற்றிருக்கும்படி முதல்வரின் படம் அதில் பொறித்திருக்கவேண்டும். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் மடிக்கணினியில் முதல்வரின் படம் இருப்பது எத்தனை அற்புதமான யுக்தி! ஆயுளுக்கும் அந்த மாணவ மாணவியர் விசுவாசமாக இருப்பார்களே. உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே என்று நம்பும் மக்களுக்கு அம்மா உணவகத்துச்சோறு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும். கட்சித் தலைமையை ஆராதிக்கும் பணியில் தமிழரை யாரும் மிஞ்சமுடியாது.
கடவுளின் உன்னதத்தை விளக்கும் வகையில் கோவில் கோபுரங்கள் எழுப்பப்பட்டன. வானளாவ உயர்ந்து நிற்கும் கட் அவுட்டுகள் தலைவரின் மகத்துவத்தை விளக்கும். பழைய கடவுள்களின் இடத்தைத் தலைவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். பெரியார் அதைப்பார்ந்து நொந்துபோகமாட்டார்? அவரையும் கடவுளாக்கிவிட்டால் போகிறது. ரோஜா வண்ணக் கன்னங்களுடன் பெரியாரை கட் அவுட்டில் வரைந்து வானுக்கு உயர்த்திவிட்டால் போகிறது. திமுக அதிமுக இரு கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திலும் அவருக்கு இடமுண்டு. இரு கட்சிகளுக்கும் அவர்தானே சூத்ரதாரி?

உச்சநீதிமன்ற உத்தரவுகண்டு இப்போது அமைச்சர்கள் குழம்பிப்போவார்கள். கட் அவுட்டகளின் தாக்கத்தைவிட அவர்களின் அரசுவிளம்பரங்கள் தலைமையின் மகத்துவத்தைக்கொண்டாடும் அதிகபட்ச வலுவான ஆயுதமாக இருந்துவந்திருக்கிறது. அதெப்படி முதல்வரின் புகைப்படத்தைப் போடாமல் அரசு விளம்பரங்களைத் தயாரிப்பது. ஒரு கார்டில்  கடிதம் எழுதும் முன்புகூட பிள்ளையார்  சுழி போட்டு பழக்கம். அதுபோல முதல்வரின் படம் ஒரு பிள்ளையார் சுழி. அது இல்லாமல் எப்படி எந்த வேலையையும் துவங்குவது?
     

No comments:

Post a Comment