Friday, 15 May 2015

ஜெயகாந்தன் என்ற ஆதர்சம்அவர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்துத் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டார்கள்.உடல் மொழியில் ஒரு தயக்கமும் உச்சரித்த வார்த்தைகளில் லேசான தடுமாற்றமும் வெளிப்பட்டன. இலக்கிய உலகில் தங்களது இருப்பைப் பற்றின நிச்சயமற்றவர்கள் போல. அன்றைய பழமைவாத நிதான போக்கில் இருந்த இலக்கிய சூழலுக்கு மிகப் பொருத்தமாக அவர்களது பாவனைகள் இருந்தன. அப்போதுதான் பிரவேசித்தான் அந்த இளைஞன்--குள்ளமான உருவம்; கலைந்த கரிய பிடரிபோன்ற முடி; கையில்  புகைத்த நிலையில் ஒரு சிகரெட். புகையை அலட்சியமாக ஊதியபடி அவன் மேடைக்கு நகர்ந்தான் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த பெண் எழுத்தாளர்களின் மேல் அது வீசிப்படர்வதைக்கண்டும் காணாமல். அவர்கள் அதிர்ச்சியிலிருந்து வெளிப்படுவதற்குள் அவன் மைக்கின் முன் நின்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்-- . ஜெயகாந்தன், தமிழ் நாட்டின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளன்!

 அது நடந்து ஐம்பத்திஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும் . எனக்கு அதை நினைவுகூர்ந்தவர் அந்த தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட  அன்றைய மூத்த எழுத்தாளர்  அனுத்தமா அவர்கள். ஜெயகாந்தனின் எழுத்தில் அவர் வசீகரிக்கப்பட்டிருந்தார் . திமிரோ , கர்வமோ, இருந்துட்டுபோகட்டும்; என்ன எழுத்து! என்ன மூளை பாரேன். அதை நா எத்தனை தடவை வேணுமானாலும் வலம் வந்து நமஸ்காரம் பண்ணுவேன்.’. என்று முகம் விகசிக்க அவர் சொன்னது நேற்றுபோல் இருக்கிறது. மடிசார் கட்டிய, பிராமண பழமைவாத உருவம் கொண்ட, நான் மாமி என்று மிக நெருக்கமாக உறவு கொண்டிருந்த பாசம் மிகுந்த  அநுத்தமா.

அந்த இளைஞனுக்கு பிறகு நாட்டின் மிகச்சிறந்த இலக்கிய விருதான ஞான பீட விருது 2002ல் கிடைத்தபோது  ஞானபீட குழு அளித்த citationநில்  எழுதப்பட்டிருந்தது: தமிழ் மொழியின் மிக உயர்ந்த  இலக்கிய பண்புகளை ஜெயகாந்தன் செழுமைபடுத்தியதோடு இந்திய இலக்கியத்தை வளப்படுத்தியதில் ஆகச் சிறந்த பங்களிப்பு அளித்திருப்பதற்கான விருது....ஞான பீட விருது பற்றி கேள்வி படாத  காலத்திலேயே  தனது இலக்கிய ஆளுமை பற்றின சந்தேகம் ஜெயகாந்தனுக்கு இருந்திராது.    

எனக்கு அந்தத் திமிரேகவர்ச்சியாக இருந்தது. அனுத்தமா என்னிடம் அந்த சம்பவத்தை விவரித்தபோது நான் ஜெயகாந்தனிடம் காதல் கொண்டிருந்தேன். தீவிரமாக. நான் மட்டுமில்லை- முப்பதுகளில் இருந்த என்னுடைய [ ஆழ்ந்த ஆங்கில இலக்கிய பற்றுகொண்ட] சித்தப்பா, சித்திகள் , எனது தாய் உள்பட  ஜெயகாந்தனின் பயங்கர விசிறிகளாக இருந்த காலம் அது. வாரப்பத்திரிக்கைகளில் வந்த அவரது கதைகளை குறித்த அலசல்கள்  எப்போதும் எங்கள் வீட்டில் நடக்கும்.அது ஒரு பொற்காலம். பெங்களூரில் ஆனந்த விகடனும் கல்கியும் குமுதமுமே வாசிக்கக் கிடைக்கும். விகடனில் ஜெயகாந்தன் கொடிகட்டிப்பறந்த நாட்கள். கிட்டத்தட்ட  ஒவ்வொரு வாரமும் அதில் வெளிவரும் முத்திரைக்கதை அவருடையதாக இருக்கும். அரியலூர் ரயில் விபத்து நடந்த சமயம். உடனடியாக அவரது கதை - ஒரே ஒரு பக்கக் கதை- தர்மம் தலை காக்கும் என்ற அர்த்தத்தில் எழுதப்பட்ட கதை முத்திரைக்கதையாக வெளியாகியது. எனக்கே அது கிடைத்ததுபோல நான் சந்தோஷப்பட்டுக் குதித்தது எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறதுவெளிவந்த ஒவ்வொன்றும் நெஞ்சில் பதிந்து புதிய வெளிச்சத்தைக் காட்டியதுபோல பரவசத்தை ஏற்படுத்தும். அதுவரை நாங்கள் படித்து வந்திருந்த லக்ஷ்மி, தேவன், கல்கி போன்ற எழுத்தாளர்களின் வட்டத்திலிருந்து விலகி வேறு ஒரு அற்புத உலகம் விரிந்ததுபோன்ற பரவசம். அந்தப் பார்வை அலாதியானதாக இருந்தது. வாழ்வின், உலகின் விளிம்பு நிலை மனிதர்களை அத்தனைக் கரிசனத்தோடு புரிதலோடு நேயத்துடன் உரத்த சிந்தனையோடும் ஒரு எழுத்து கொண்டாடியது படித்துமுடித்ததும் மனத்தை நிறைத்து உவகைக் கொள்ளச்செய்யும். அது துன்பியல் கதையாக இருந்தாலும் அந்த வாழ்க்கையில் கொண்டாட்டம் இருந்தது .   குப்பையில், ஏழ்மையில், விபசாரத்தில் திருட்டில் , சவக்குழி தோண்டும் மனிதனில்,பிளாட்பாரத்தில் வாழும் அடிநிலை மக்களின் வாழ்வின் அவலங்களைச் சொல்கையிலும் அவர்களில் உன்னதங்களைக்கண்ட பார்வை அது. வாழ்வு ஒரு கொண்டாட்டம் - அதன் கதாஅபாத்திரங்கள் எவருமே வில்லன்கள் இல்லை என்று  கண்ட ஞானப் பார்வை அது.பாலியல் பலாத்காரம் செய்தவன்கூட காமுக வெறியன் இல்லை. தனது செயலுக்கு வருந்தித் திரும்பத் திரும்ப 'சாரி' சொல்பவன். அப்பெண்ணை இறக்கிவிடும்போது அவளுடைய அக்கம்பக்கத்தவர் பார்வையில் படாதவகையில் வீட்டுக்குச் சற்றி தள்ளி வண்டியை நிறுத்துபவன். உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான் ஆகிய நெடுங்கதைகளை என் சித்தப்பா நடுவில் அமர்ந்து வாசித்ததும் நாங்கள் சுற்றி அமர்ந்து கேட்டதும் கதை முடிந்ததும் எல்லார் கண்களிலும் கண்ணீர் இருந்ததும்  என் நினைவில் பசுமையாக இருப்பவை. ஒரு பேட்டியில் அவர் அதை சமுதாய  ஆன்மீகப் பார்வைஎன்று சொன்னார். [அதைப் புஷ்பா தங்கதுரை கேலி செய்து ஒரு எதிர் பேட்டி கொடுத்தார். அதைப்படித்து எனக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை!]ஜெயகாந்தன் தம் கதைகளில் முன்வைத்த வாதங்கள் தார்மீக மதிப்பீடுகள் சார்ந்தவையாக யதார்த்தமாக நம்பும்படியாக, நம்பிக்கை ஊட்டுவதாக இருந்ததாலேயே ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றுகிறது. அவை வறண்ட உபதேசங்கள் இல்லை. அவர் நம்பிய இடது சாரி கம்யூனிச பிரச்சாரங்கள் இல்லை. நேயமும் அழகும் மிக்க கதையாடல்கள் ஊடாகத் தெரிந்த பரந்த  யதார்த்த உலகம். ஏழ்மையும் பலவீனமும் மானுடத் தவறுகளும் பாவங்கள் இல்லை என்று உணர்த்திய பார்வை. விக்டர் ஹ்யூகோவின் லே மிராப்லகதையில் வரும் பாதிரியைப்போல. படிப்பவரை உய்விக்கும் எழுத்து ஜான் வால்ஜான்மறுபிறவி எடுத்ததுபோலஎனது பதின் வயதுகளில் அந்த எழுத்தில் நான் முழுதுமாக ஆட்கொள்ளப்பட்டேன்படித்த ஒவ்வொரு கதையும் என்னை மேம்படுத்தியதான உணர்வு ஏற்பட்டது. நல்ல இலக்கியத்தின் பணியே அதுதான் என்று இப்பவும் தோன்றுகிறது. படிப்பது படிப்பவரை மேம்படுத்தவேண்டும். அத்தனைத் துல்லியமாக, தத்ரூபமாக பிராமண வகுப்புக் குண இயல்புகளையும் பேச்சையும் ஜெயகாந்தனின்  அக்னிப்பிரவேசம் , கற்புநிலை, யுகசந்தி , நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ ,மற்றும் பல கதைகளில் படிக்கும்போது எனது உள்ளார்ந்த கலாச்சார வேர்கள் உசுப்பப் பட்டதுபோல நான் உணர்வேன். பின்னாட்களில் அவரது அக்னிப்ரவேசம் பெண்ணீயப் பார்வையில் [ பாலியல் பலாத்கார செயலை இரகசியமாக வைத்திரு, அதை வெளியில் சொல்லலாகாது எனும் வாதம்] பிற்போக்குத்தனமாகத் தோன்றினாலும் அன்றைய காலகட்டத்தில், ஒரு மத்திய வகுப்புத் தாய், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மகளை சமாதானப்படுத்தி , நீ தூய்மையானவள் என்று [உன் மேல இப்ப கறையே இல்லே. நீ பளிங்குடீ பளிங்கு’] உபதேசித்தது மிகப் புரட்சிகரமான கருத்தாக இருந்தது. யோசித்துப்பார்க்கும் போது இன்றைய காலத்துக்கும் அத்தகைய பரந்த பார்வை பலருக்கு இல்லாத , கௌரவக்கொலைகள் நிகழும் காலத்தில்  தேவைப்படும் ஒன்று என்று தோன்றுகிறது

 அவரைச் சுற்றிச் சர்ச்சைகளுக்குக் குறைவில்லை.அவரது குடிப்பழக்கம் , கஞ்சா பழக்கம் ஆகிய விஷயங்கள் அவரது கலக பிம்பத்துக்கு வண்ணம் சேர்த்தன. ஃப்ரெஞ்சு பொஹீமிய கலைஞர்களை நினைவுட்டி இளைஞர்களுக்கு  அபிமானத்தை ஏற்படுத்திற்றுஅவர் அதைக்கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஜெயகாந்தன் ஒரு சகாப்தமானார். இளைய தலைமுறை அவரை ஆராதித்தது. மூத்த தலைமுறை அவரது கலகக்கார, அகம்பாவ பேச்சைக்கண்டு முகம் சுளித்தாலும் அவரது எழுத்தின் தாக்கத்தை உணர்ந்து மதித்தது.   அவர் வேறு எழுத்தாளரை படிக்கவில்லை. தனக்கு நிகர் யாருமில்லை என்கிற எண்ணம் அவருக்கு மிக இயல்பாக இருந்தது.

ஆச்சரியம்தான். ஐந்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை விட்டவர். கடலூரில் 1934-ல் ஒரு  விவசாயகுடும்பத்தில் இலக்கிய ரசனை கொண்ட தாய்க்குப் பிறந்தவர். படிக்கப்பிடிக்காமல், கட்டுப்பாடான வாழ்க்கை பிடிக்காமல், வீட்டைவிட்டு 12 வயதில் ஓடிப்போய் விழுப்புரத்தில் மாமன் வீட்டில் சரணடைந்தவர். அது அவரது வாழ்வின் திருப்புமுனை. அப்போதுதான் மார்க்ஸும் பாரதியும் பரிச்சயமானார்கள்.பாரதி கடைசி மூச்சுவரை அவருடன் இருந்திருக்கவேண்டும். பாரதி அவருக்கு ஏற்படுத்திய தாக்கம்போல வேறு எந்த கவியும் ஏற்படுத்தியதில்லை என்று எனக்குத் தோன்றும். சென்னையில் பல இடங்களில் ஜெயகாந்தன் பேசக் கேட்டபோது மனசும் உடம்பும் எனக்கு சிலிர்த்திருக்கிறது அத்தனை சின்ன உருவத்தில் அது என்ன சிம்மக்குரல்! 'அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லையென்பதில்லையே"  என்று கர்ஜிக்கும் குரலில் ஒரு சமயம் பேச ஆரம்பித்தபோது அரங்கத்தில் அமானுஷ்யமாக இருந்த எல்லா துர்தேவதைகளும் ஓட்டமெடுத்ததுபோல இருந்தது. பாரதி நுழையாத பேச்சே இல்லை. வள்ளுவனும் கம்பனும் பாரதியும் அவருள் ஒரு அக்னியை மூட்டியதுபோல அவர் அந்த ஆகுதியில் திளைப்பவர்போல பொலபொலவென்று சொற்களை உதிர்ப்பார். எழுத்தாளர்களில் அத்தனை சக்திவாய்ந்த பேச்சாளரை நான் கண்டதில்லை. எப்படி சாத்தியமாயிற்று? ஒரு சுயம்புவாக எப்படி அத்தனை எழுச்சிமிக்க எண்ணங்களை அவர் தனதாக்கிக்கொள்ள முடிந்தது?
சென்னைக்குக் குடிபெயர்ந்ததும் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஜனசக்தி அலுவலகத்திலேயே நாள் முழுவதும் கழித்து மாலையில் தெருமூலைகளில் நின்று  ஜனசக்தி இதழ்களை விற்பார். அந்த கால கட்டத்தில் ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் பரிச்சயமானார்கள். ஆனால் அன்றைய அரசியல் நிகழ்வுகள் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் நடவடிக்கைகள் குறைந்தன. ஜெயகாந்தன் தஞ்சாவூருக்கு நகர்ந்து ஒரு செருப்புக்கடையில் வேலை பார்த்தார்மறுபடியும் சென்னைக்குத் திரும்பி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சேர்ந்தார். அது மிக முக்கியமான காலகட்டம். நிறைய படித்தார். சுற்றுச்சூழலில் இருந்த அரசியல் மாற்றங்களைக்கூர்ந்து கவனித்தார்ஈவேராவின் திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸக் கட்சியை இருளடித்த காலம். ஜெயகாந்தன் திராவிட இயக்கத்தை வெகுக் கடுமையாக அது ஒரு ஃபாஸிஸ இயக்கம் என்று விமர்சித்தார். பெரியாரின் தீவிர பிராமண எதிர்ப்பைத் துணிச்சலாக விமர்சித்தார். ஹிந்தி எதிர்ப்பையும் அவர் ஆதரிக்கவில்லை. தம் மொழி  மீது அன்புகொண்டவர்களுக்கு பிற மொழிமீது வெறுப்பு வராது  என்ற வாதம் அவருடையது. திமுக ஆட்சியில் இருந்தபோதே  திராவிட சித்தாந்தங்களை செயல்பாடுகளை தயங்காமல் விமர்சித்தார். சி.என்.அண்ணாதுரை இறந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரங்கல்கூட்டத்தில் அவர் கொஞ்சமும் இங்கிதமில்லாமல் அண்ணாத்துரையை விமர்சித்ததைக்கண்டு  அப்போது அவர் சார்ந்திருந்த காங்கிரெஸ் கட்சிக்காரர்களே சங்கடத்தில் நெளிந்தார்கள். அதே ஜெயகாந்தன் பின்னாளில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து அன்றைய முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மருத்துவ செலவுக்கு ஏற்பாடு செய்தபோது, நெகிழ்ந்துபோன ஜேகே, மருத்துவமனையிலிருந்து விடுபட்டுக்கிளம்பியதும் நேரே கருணாநிதியின் வீட்டிற்குச் சென்றார் நன்றி தெரிவிக்க
இடதுசாரிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்பட்டு அங்கிருந்து விலகி காமராஜ நாடாரின் அபிமானியாகி காங்கிரெஸ் கட்சியில் சேர்ந்தாலும் அவர் கடைசிவரை மார்க்ஸிஸ்டாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும். சோசலிஸ எண்ணங்களே அவரது பின்னாள் ஆன்மீக கருத்துக்களுக்கு ஆதாரமாக    இருந்திருக்கும்ஆனால் அவர் எழுதிய ஹர ஹர சங்கரவும் ஜெய ஜெய சங்கரவும் அவரது ஆரம்பகால எழுத்துக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கவில்லை.  2002இல் ஞான பீட விருது கிடைத்தபோது காலம்கடந்து அவருக்குக் கிடைத்த  விருதாகத் தோன்றிற்று. இடையில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்களும்  அவரை வாசிக்காத வாசகர்களும் தோன்றியிருந்தார்கள்.

’65- ’75 காலகட்டத்தில் நான் எனது கணவரின் மத்திய அரசுவேலை மாற்றல்கள் நிமித்தமாய் மீஜோராம், மேகாலயா, அருணாசலப்ப்ரதேசம் அஸ்ஸாம் என்று வடகிழக்கு மாநிலங்களில் வசிக்க நேர்ந்தபோது ஜெயகாந்தனின் எழுத்தை உடனுக்குடன் வாசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போயிற்று. பிறகு நேபாளத்தில் நான்கு ஆண்டுகள் இருந்த சமயத்தில் பாரீஸுக்குப் போ மற்றும் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்  ஆகிய நாவல்களை வரவழைத்துப் படித்தேன். அதில் வெளிப்பட்ட  சமூகத்தின் போலியான மதிப்பீடுகள் கற்பிதங்கள் ஊடாக தொனித்த மனித நேயம்  என்னை மீண்டும் ஆட்கொண்டது. தமிழில் வந்த classic  அவை என்று நினைத்துக்கொண்டேன். அவரது ஒரு பேட்டியை அப்போது படித்தேன்ஜெயகாந்தன் சகாப்தம் என்று குறிப்பிட்டபோது  அது என்னோடு முடியாதுஎன்றார் அவர். பாரதியிலிருந்து  நான் பரிணமித்ததுபோல பலர் என்னிலிருந்து பரிணமிப்பார்கள். ஒவ்வொரு தலைமுறையும் ஒரு மறுமலர்ச்சியை  எதிர்நோக்கலாம்’. இத்தனை சுயமதிப்பு வேறு எந்த எழுத்தாளனுக்கு இருக்கும்?  

இந்தியா டுடேயின் தமிழ் இதழுக்கு ஆசிரியையாகப் பணியேற்று முதல் முதலாகச் சென்னைக்குக் குடியேறியபோது என்னுடைய ஒரே ஆசை ஜெயகாந்தனை சந்திக்கவேண்டும் என்பதாக இருந்தது. அவரது வீட்டில் , புகழ் பெற்ற அவரது சபையில்பங்கு கொள்ளவேண்டும் என்று இருந்தது. பெண் என்பதில் எத்தனை அசௌகரியம் என்று மெல்லத்தான் புரிந்தது. அச்சபையில் பங்கேற்ற சா.கந்தசாமியிடம் எனது விருப்பத்தைதெரிவித்தபோது அவர் ஏதேனும் சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழித்துவிடுவார். அங்கு நடப்பவற்றையெல்லாம் பராபரியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். சிங்கத்தை அதன் குகைக்குள்ளே பார்க்கவேண்டும்என்ற எனது விருப்பம் நிறைவேறாமலே போயிற்று. அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் ஜெயகாந்தனை சந்தித்ததோடு சரி. அப்போதெல்லாம் எதுவும் பேசத்தோன்றாது. அவர் என்னை கவனித்துக்கூட இருக்கமாட்டார்அவரது பேச்சைக்கேட்க வாய்ப்பு கிடைத்ததே பெரிய பாக்கியமாகத் தோன்றிற்றுஅப்போது வாராவாரம் இந்தியா டுடேயில் சிந்திக்க ஒரு நொடி என்று ஒரு பத்தி எழுதுவேன். அதை இரண்டு தொகுப்பாகப் புத்தகம் வெளியிடலாம் என்ற யோசனை வந்தபோது ஒரு தொகுப்புக்கு ஜெயகாந்தனை முன்னுரை எழுதச் சொல்லலாம் என்று யோசனை சொன்னார் கந்தசாமி. எனக்கு மகாக் கூச்சமாக இருந்தது. நான் உபாசித்த ஒரு மகத்தான கலைஞனிடம் எனது எழுத்தைக்காண்பிப்பது ஆங்கிலத்தில் சொல்வதுபோல blasphemy என்று கூசிற்று. அதற்கும் கந்தசாமியே ஏற்பாடு செய்தார். நான் ஜெயகாந்தனிடம் நேரில் சென்று கேட்கவே இல்லை. விரைவில் ஒரு அழகிய உற்சாகமூட்டும் முன்னுரையை எழுதி அனுப்பினார் ஜெயகாந்தன். நான் உணர்ச்சிவசப்பட்டுப்போனேன். அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மிக்க  நன்றி ஐயா என்றேன். நீங்கள் என் ஆதர்ச எழுத்தாளர். உங்கள் எழுத்துதான் என்னை எழுத வைத்ததுஎன்று உளற ஆரம்பிப்பதற்குள் அவர் இடைமறித்து,’ நீங்க எழுதற  ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமான வார்த்தை. மக்கள் அவசியம் படிக்கணும். எல்லாரும் படிக்கணும். நிறைய எழுதுங்கோ!’  என்றார்.

அன்று முழுவதும் ஒரு லாகிரியில் மிதந்தேன். கண்களில் நீர் நிறைந்த வண்ணம் இருந்தது. இரவு தூக்கம் வரவில்லைவசிஷ்டர் வாயால் ப்ரும்மரிஷி  என்ற பட்டம் கிடைத்ததுபோல சந்தோஷமாக இருந்தது. ஒரு காலத்தில் உங்களைத் தீவிரமாகக் காதலித்தேன் என்று சொன்னால் என்ன சொல்லியிருப்பார் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டேன்.

இப்போது அவர் இல்லை. புகழ் மங்காமலல் மறைந்துவிட்டார் என்னுள் இருந்த இரகசியத்தைத் தெரிந்துகொள்ளாமலே.

 


1 comment:

  1. மிகவும் நன்றாக உங்கள் பழைய நினைவுகளை எழுதி இருக்கிறீர்கள். உங்கள் வயதில் இருக்கும் எல்லாருக்குமே இது பொருந்தும் என்று நினைக்கிறேன். ஞானபிட விருது காலம் கடந்துதான் கிடைத்தது. ஆனால் அப்போதாவது கொடுத்தார்களே. கருத்து செறிவும், நேர்மையான கருத்துக்களும் கொண்ட எழுத்தாளாராக இருந்தும் மிகவும் அதிகம் பேரால் வாசிக்கபடுவதும் போற்றபடுவதும் அரிதாகவே நடக்கும். ஆனால் அவர் சொன்னது போல அவரின் இடத்தை (அவர் இத்தனை ஆண்டுகள் எழுதாமல் இருந்தும்) யாரும் நிரப்பியதாக தெரியவில்லை.

    ReplyDelete