Saturday, 28 February 2015

மொழியை விழுங்கும் புதிய சுனாமி


வெகு விரைவில் மனித இனங்கள், அதாவது டெக்னாலஜி என்கிற அசுரனின் வலையில் விழுந்திருக்கும் மனிதஇனங்கள், ஊமைகளாய் 
செவிடர்களாய் போனால் அதற்கு ஒப்பாரி வைக்கக்கூட இயலாமல் போகும். குறுந்தகடு ,முகநூல் ட்விட்டர் யுகத்தில் மொழி என்பது கண்டந்துண்டமாய் 
சிதிலமடைந்து போய்விட்டது

Queen's English என்று பெருமை கொண்ட ஆங்கில மொழி சொற்களை இழந்து உருமாறிப்போனது நினைத்துப்பார்க்க முடியாத சோகம். மூன்று எழுத்து நான்கு எழுத்து வார்த்தைகள் ஒற்றை எழுத்தில் நிற்கும் வாக்கியங்களூக்குப் பழகிப்போன இளைய தலைமுறைக்கு இனி ஒழுங்காக ஆங்கிலம் எழுத முடியுமா என்பது சந்தேகம்.. 

தமிழில் இன்னும் அத்தனை அவலம் வராவிட்டாலும்  மின்னஞ்சல் வந்த பிறகு  தாள் எடுத்துக் கடிதம் எழுதும் பழக்கமே போய்விட்டது. கடிதம் எழுதுவதே ஒரு கலையாக இருந்த ஒரு அற்புத காலம் இருந்தது. இரண்டே வரியானாலும் அன்பும் பாசமும் கரிசனமும் கனிவும் இழையோடும் சொற்கள் கோர்த்த கடிதங்கள். கண்ணீர் கக்கும், விரகம் தகிக்கும், 
ஏக்கம் மிளிரும் கடிதங்கள். ஒரு கார்டில் வெளிப்படையாய் எழுதப்பட்டிருக்கும் 
அந்தரங்கங்கள்அதைக் கொண்டுவரும்  தபால்காரர் அதை படித்து நமது உணர்வுகளை  பகிர்ந்துகொண்ட தருணங்கள் அசாதாரண உறவுப் பாலங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. 

கைப்பட எழுதும் கார்டில் வெளிப்படும் நட்பும் நேயமும் ஒரு பண்பின் பண்பாட்டின் வெளிப்பாடாகவே இருந்தது.  இப்போது
நமது உறவுகள் எல்லாம் முகநூல் வாயிலாக.  திண்ணைப்பேச்சின் புதிய வடிவம். ஆனால் இது ஒருபோதை தரும் திண்னைஅதன் வலையில் விழுந்தவர்களுக்கு அதன் முகத்தில் விழித்தால்தான் அன்றைய தினம் நகரும். அது ஒரு இலவச சாளரம் -தம்மையே விளம்பரப்படுத்திக்கொள்ள, அல்லது தேவையற்ற விவாதங்களைக் கிளப்பி ஒருவர் மற்றவரைத் தூற்ற

ஆக்கபூர்வமான நேரமெல்லாம் விரயமாகி  புகைப்படங்கள் 
நிரம்பிய- அப்பாவுடன்அம்மாவுடன், நாயுடன், சிநேகிதர்களூடன்  விருந்தில் எடுத்த புகைப்படங்கள்--  

பக்கங்களைப் பார்த்து யாருக்குஎன்ன லாபம் என்று  புரியவில்லை. 
ஏதோ ஒரு கற்பனை உலகத்தை  நிஜமற்ற பொய்யான 
உலகத்தைமெனக்கெட்டு சிருஷ்டிப்பது போல் 
ஒரு மாயை விரிகிறது.நெருக்கமான எதையோ இழந்ததற்குப் 
பரிகாரமாக ஒரு தெரப்பியாக  அதில் நவ யுகம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளப் பார்க்கிறதோ? முகநூல்அறிமுகமானபோது அது மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இப்பவும் முகநூலில் சிலர் முக்கிய உலக விஷயங்களை /இலக்கியங்களை ஆராய்ந்து பகிர்ந்துகொள்வது அறிவார்த்த 
சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவது உண்மை

பலர் பல அரிய பணிகள் செய்வதைப்பற்றின தகவல் அதற்கென ஒரு வலை பின்ன உதவுகிறது. ஆனால் அநேகமாக  முகநூல் வெறும்  தேவையற்ற அக்கப்போர் பேசுவதற்கே உபயோகிக்கப்படுகிறது

கணிசமான நேரத்தை விழுங்கிக்கொள்கிறது. நேரிடையான மனிதத்தொடர்பே அற்றுப் போகும் நிலையில் நாம் 
இருக்கிறோம் என்று என்னை அச்சுறுத்துகிறது.
           
2001- ஆண்டு நான் ஒரு நிகழ்வில் பங்கேற்க ஜப்பான் சென்றிருந்தேன்.பரபரப்பான சுறுசுறுப்பான நகர் புரத்துச்சூழலிலும் ஒரு அமைதியும்நம்பமுடியாத துப்புரவும் பிரமிப்பை ஏற்படுத்தின. 
ரயில் பயணங்களில் புத்தகங்களைப் படித்தபடி 
ஜப்பானியர் இருந்தனர்.சத்தமானப் பேச்சில்லை. உரத்த வாக்குவாதங்களை நான் கேட்கவில்லை

பாரம்பர்ய பண்பாட்டில் வளர்ந்த பெரியவர்களுக்கும் 
நவீன உலகதாக்கத்தில் இருந்த இளைய தலைமுறைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுப்போனதால் பல சிக்கல்கள் புதிதாகக் கிளம்புவதாக 
நான் சந்தித்த  சில பெண்கள் சொன்னார்கள்

முற்றிலும் மாறியிருக்கும் இன்றைய 
இளையதலைமுறையினரின்  உலகத்தை ஜப்பானிய எழுத்தாளர் 
ஹாருக்கி முரக்காமி படம் பிடிப்பார். ஜப்பானிலா இப்படிஎன்று வியப்பேற்படும். அவரது பல நாவல்களைப் படித்திருக்கும்
எனக்கு அவர் வர்ணித்திருக்கும் வகையில் இளைஞர்கள் அங்கு 
2001 -ல் காணப்படவில்லை

நான் அங்கு இருந்தது ஐந்தே நாட்கள். நான் பார்த்த வரையில் சூழலில் ஒரு அமைதி இருப்பதாகத் தோன்றிற்று
பணிக்குச் சென்று வீடு திரும்புகையில் ரயிலில் பயணம் 
செய்பவர்களின் கையில் தப்பாமல் ஒரு புத்தகம் இருப்பதையும் 
அதில் அவர்கள் ஆழ்ந்து போவதும்தான் எனக்கு  பிரமிப்பாக இருந்தது. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் கணினி டெக்னாலஜி புரட்சியில் ஜப்பான் வெகுவாக மாறிப்போனதாகத்தெரிகிறது. இன்று புத்தகம் 
படிப்பவர்களே அங்கு இல்லை என்று 
சமீபத்தில் ஒரு எழுத்தாளர் புலம்பியிருக்கிறார். மிகநவீன 
கைப்பேசியிலேயே எல்லோருடைய பொழுதுபோக்கு மற்றும் அறிவார்ந்த வேட்கைகள் சமாதானமாகி விடுகிறது என்கிறார்

ஒருத்தருக்கொருத்தர் பேசுவதுகூட நின்றுபோனது என்கிறார்
ஜப்பானிலிருந்து ஹாங்காங் சென்றபோது 2001-லேயே அங்கு நான் யார் கையிலும் புத்தகத்தைப் பார்க்கவில்லை. சயன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தைப் பார்ப்பதுபோல ஒரு அமானுஷ்ய 
உணர்வு ஏற்பட்டது. தெருவில் போவோர் வருவோர்  
கைபேசியில் யாரோ முகம்தெரியாத குரலுடன் பேசியபடி 
இருந்தார்கள். அக்கம்பக்கத்து நடைமனிதர்களுடன் தொடர்பே 
இல்லாதவர்களாகத் தோன்றினார்கள். இந்தியாவில் மொபைல் பேசி அப்போது அவ்வளவு சரளமாகவில்லை. ஹாங்காங்கில் நான் கண்டகாட்சி எனக்கு 
மிக பயங்கரமாகத் தோன்றிற்று. யதார்த்த உலகத்திலிருந்து 
மனிதர்கள் விலகிப் போனதாகப்பட்டது

இப்போது பெங்களூரில் தெருவில் நடக்கும்போது அதேவகையான 
காட்சியைக் காணுகிறேன்நேரில்சந்திக்கும்போது பேசத்திணறும் இளைஞர்கள் செல்பேசியில் மணிக்கணக்காகப் பேசுகிறார்கள்.  யாரிடமோ. 
ஆகாயத்தில் உலா வரும் தேவதைகளுடன் பேசுவதுபோல. 
அல்லது செவியில் ஸ்பீக்கரைப் பொருத்திக்கொண்டு 
சதா சர்வகாலமும் சினிமா பாட்டுகேட்கிறார்கள்எனக்கு 
யாருடனும் நேருக்கு நேர் பேசவிருப்பமில்லை என்கிற சமிக்ஞை  
விடுவதுபோல..
   
முன்பு  வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் இழுத்துவைத்துப் பேச
அவர்களும் காணாமல் போனார்கள் சாவித்ரி வைத்தியின் 
விஷ்ராந்தியிலோ வேறு எங்கோஅவர்கள்  இல்லாமல் போனதில் 
கதைசொல்ல எவருமில்லைஅதற்குத் தேவையில்லைஇப்போது பிறக்கும் குழந்தைகள் இண்டர் நெட் புலிகள்இரண்டு வயது குழந்தைகள் வலைத்தளங்களை மேய்கின்றனராமாயணமும் 
மஹாபாரதமும் அனிமேஷனில் தெரிகின்றன.

பேச்சுக்காக ஏங்கப்போகிறோம் ஒருநாளைக்கு.  பேச்சுமொழி 
வழக்கொழிந்து போனால் ஒப்பாரி வைக்கக்கூடமுடியாது
அதற்கும் சொற்கள் தேவை.  


Thursday, 26 February 2015

காசப்ளாங்கா - மரபும் புதுமையும்

அது ரம்ஜான் காலம். அன்று ஈத் பெருநாள், வெள்ளிக்கிழமை. 
நான் வியப்புடன் அருகில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியை கவனித்தபடி இருந்தேன். தோஹாவிலிருந்து  மொராக்கோவின் நவீன வர்த்தக நகரமான காசப்ளான்கா செல்லும்  விமானப் பயணத்தின் பெரும்பாலான நேரத்தை அந்தப் பெண் ப்ரார்த்தனையில் கழித்தார்.குனிந்த முகம் கரிய மேலங்கியில் மறைந்திருந்த நிலையில் சிவந்த உள்ளங்கையில் வைத்திருந்த சிறிய புத்தகத்தைப் பார்த்து அதன் வரிகளை தனக்குள் உச்சரித்தபடி லயித்திருந்த அவரது சிதறாத கவனம் என்னைக் கவர்ந்தது.பேச்சுத்துணை இல்லாமல் பயணக்களைப்பில் நான் உறங்கிப் போனேன். கலகலவென்ற சிரிப்பொலியும் சளசளப் பேச்சும் கேட்டு நான் விழித்தேன். நான் பயணித்த கட்டார் விமானத்தின் இரண்டு அழகிய விமானப் பணிப்பெண்கள் குனிந்து நின்றபடி என் அருகில் அமர்ந்திருந்த பெண்ணுடன் மெல்லிய குரலில், சிரிக்கச் சிரிக்க அட்டகாசப் பேச்சில் ஆழ்ந்திருந்தார்கள்.  அந்தப் பெண்ணின் தலை முக்காடு விலகியிருந்தது. அவள் மிக அழகிய இளம் யுவதி. சற்று முன் தோன்றிய அவளது தோற்றம் ஒரு மாயைபோல் இருந்தது. பணிப் பெண்கள் பணி நிமித்தம் அப்பால் சென்றதும் நான் அவளுடன் பேச்சுக் கொடுத்தேன்.  அவளது பெயர் மிரியம் என்றும் அவர்கள் அவளது தோழிகள் என்றும் தெரிந்துகொண்டேன் . மிகக் கச்சிதமான ஆங்கிலத்தில் பேசினாள். அவளும் அதே விமானத்தில் பணிபுரிபவள்தானாம். அவளது சொந்த ஊரான காசப்ளாங்காவுக்கு  விடுப்பில் செல்கிறாள் தனது பெற்றோர்களுடன் ஈத் பண்டிகையைக் கொண்டாட.  அவளும் அவளுடைய தோழிகளும் வேறு வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருத்தி ட்யுனீசியா, மற்றொருத்தி எகிப்து.   ஆனால் மூவரும் அரபு மொழியில் பேசிக்கொண்டார்கள். சிறு பிராந்திய வேறுபாடுகள் இருந்தாலும் எங்கள் எல்லாரையும்  அரபு மொழி இணைக்கிறது என்று அவள் சிரித்தாள். 

மொராக்கோ பல ஆண்டுகள் ஃப்ரென்சு ஆட்சியின் கீழ் இருந்ததால் ஃப்ரென்சுப் பள்ளியில் படித்த மிரியம்முக்கு ஃப்ரென்சு மொழியும் தெரியும்.  மிக முற்போக்கான சமூகத்தில் உள்ள சுதந்திரமான சிந்தனையுள்ள  நவீனப் பெண்ணைப் போல இருந்தது அவளது பேச்சு. அரைமணி நேரம் முன்பு அவள் பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்த விதத்தையும் அவள் அணிந்திருந்த உடல் மூடிய அங்கியையும்  பார்த்து நான்  இத்தகைய ஆளுமையை எதிர்பார்த்திருக்கவில்லை. எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. 2000-ம் ஆண்டு மொராக்கோவின் தலைநகரமான ரபாத்தில் மன்னரின் அரண்மனையை நோக்கி, தங்களது வாழ்வுரிமைகளை சட்டப்படி சீர்திருத்தக்கோரி 60 பெண் குழுக்கள் வழிநடத்த நூற்றுக்கணக்கான பெண்கள்  கோஷமிட்டபடி நடந்தார்கள்.அதன் வலிமையை உணர்ந்து மன்னர் முஹம்மது VI  முதவனா / குடும்பச் சட்டத்தை 2004-ல் கொண்டுவந்தார். 

விமானம் காசப்ளாங்காவைத் தரைத்தட்டியதும்மிரியம் என்னை நோக்கிப் புன்னகைத்து, ‘வெல்கம் டு கசப்ளாங்கா!என்றாள். உங்களுக்கு மொராக்கோ பிடிக்கும். மொராக்கர்கள் மிகவும் சிநேகிதமானவர்கள்‘ .

காசப்ளாங்கா என்ற பெயர் எனக்குச் சிறு வயதிலிருந்து கவித்துவம் மிக்க பெயராகத் தோன்றும். பள்ளியில் நான் படித்த காசபியாங்கா என்ற புகழ்பெற்ற  ஆங்கிலக் கவிதையுடன் நான் அதை சம்பந்தப்படுத்திக்கொண்டடிருந்திருக்கவேண்டும் . ‘ The boy stood on the burning deck,whence all but he had fled‘  என்று சிலிர்ப்பூட்டும் வரிகளுடன் அந்தக் கவிதை ஆரம்பிக்கும்.  இந்த இடத்தைவிட்டு நகராதே என்று கப்பல் மாலுமியான தந்தை சொன்னதால் நெப்போலியனுடன் போரிட்ட  கப்பல் தீ பிடித்து எல்லோரும் கப்பலை விட்டுச் சென்றபோதும் இடத்தைவிட்டு நகராமல் அப்பாவின் [அவர் இறந்து போனது தெரியாமல்]  அனுமதி கேட்டபடி , ‘tell me father,are my duties finished yet?’  என்றபடி கடைசியில் உயிர் நீத்த சிறுவன் காசபியாங்கா. அவனுக்கும் மொராக்கோவின் வர்த்தகத் தலைநகரமான காசப்ளாங்காவுக்கும்  சம்பந்தமில்லை என்று வெகுநாள் கழித்துதான் புரிந்துகொண்டேன். ஆனால் காசபியாங்காவைப்போல காசப்ளாங்காவுக்கும் தனது நம்பிக்கைகள்மீது , மரபின்மீது அசாத்திய பிடிமானமும் பற்றும் இருப்பது தெரிந்துகொள்ளமுடிந்தது. ஆனால் காசபியாங்கா  காத்திருந்ததுபோல நவீனத்தை நோக்கி அடி வைத்திருக்கும் காசப்ளாங்கா யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காது, நிச்சயம்.    
  
அதிகபட்ச பயணிகள் பயணத்தின் இடையே தங்கும் வசதிக்காகவே  காசப்ளாங்காவில்  இடைவெளி நேரத்தைக்கழிக்க இறங்குகிறார்கள் என்று மிரியம் என்னிடம் அங்கலாய்த்தாள்.  அந்த நகரம் தனித்தன்மை கொண்ட வசீகரமான நகரம். அது மொராக்கோவின் வணிகம் மற்றும் கலாச்சாரத்தின் தலை நகரம். அங்குதான் இளைஞர்கள் எல்லாம் படையெடுக்கிறார்கள். அங்கு வேலைகிடைத்தால் தங்கள் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறார்கள். அங்குதான், கலைவிழாக்கள் ஃபேஷன் ஷோக்கள்  நடக்கின்றன. நவீன உலகின் வாசல்கள் திறக்கின்றன. ஆனால் ஒரு காலத்தில் காசப்ளாங்கா சூதாட்டக் கிடங்கு என்பார்களே? நிறைய ஹாலிவுட் படங்கள் அதைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கின்றனவே? அதெல்லாம் பழைய சமாச்சாரம் என்கிறாள் மிரியம் அவசரமாக. இப்போது இது சட்டத்தை மதிக்கும்  வெளிப்படையான , சுபிட்சத்தை நோக்கிச் செல்லும் நகரம்.
நீங்களே பாருங்கள்,’  என்று அவள் சிரித்தாள். முக்கியமாக, ஹாசன் II மசூதியைப் பார்க்க மறக்காதீர்கள்!

       காசப்ளாங்காவுக்கு பயணிப்பதற்கு முன்பு அதன் கொந்தளிப்பு மிக்க வரலாற்றை நான் படித்திருந்தேன். ஆஃப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் இருக்கிறது மொராக்கோ- மூர்ஸ் எனும் அரபிய மன்னர்கள் ஆண்ட நாடு.  அட்லாண்டிக் கடலை ஒட்டியும் ஐரோப்பாவின் மிகச் சமீபத்திலும் இருக்கும்  கடலோர காசப்ளாங்கா நகரம் பல்வேறு இனத்து பல நாடுகளின் தாக்குதலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் ஆளானதில் வியப்பில்லை.  அதன் விளைவாகப் பல்வேறு கலாச்சார கூறுகளை உள்வாங்கியதன் அடையாளம் இப்பவும் அதன் கட்டிடங்களில், பூங்காக்களில், கலைகளில்,வாழ்வியலில் தென்படுகின்றன. ஆரம்பகாலத்தில் ரோமானியர் வந்திறங்கினார்கள். 16, 17-ம் நூற்றாண்டுகளில் போர்த்துகீசியரும் ஸ்பானிஷ் நாட்டவரும் மாறி மாறி நகரத்தை ஆக்கிரமித்தார்கள்.  ஸ்பானிய மொழியில் காசப்ளாங்கா என்பதற்கு வெள்ளை இல்லம் என்று பொருள். அவர்கள் வைத்த பெயரே நிலைத்துவிட்டது. 1755-ல் ஒரு பயங்கர பூகம்பம் காசப்ளாங்காவை நிர்மூலமாக்கியது. அதற்குப் பிறகு ஐரோப்பியர்கள் காசப்ளாங்காவைப் புறக்கணித்தார்கள். அரபியர்கள் மீண்டும் உள்ளே வந்தார்கள். காசப்ளாங்கா புதுப்பிக்கப்பட்டது. சுல்தான் மொஹம்மத் பென் அப்துல்லாவின் கீழ் அதிசய வளர்ச்சி கண்டது. ஒரு நவீன துறைமுகம் கட்டப்பட்டது. அதுதான் வினையாகிப் போயிற்று. ஃப்ரான்ஸ் நாட்டுக்கு ஒரு நுழைவாயில் கிடைத்தது. அங்கு வியாபாரம் செய்யும் சாக்கில்  நுழைந்து அலுவலகம் கட்டி தூதரகம் அமைத்தது. ஒரு கால கட்டத்தில் உள்ளூர் அரபியர்களுக்கும் ஃப்ரென்சுக்காரருக்கும் ஏற்பட்ட சண்டையில்,1907 ல் துறைமுக தொழிலாளிகள் கொலை செய்யப்பட்டார்கள்.  வெகுண்ட அரபியர்கள் தூதரகத்தை  முற்றுகை இட, அதை மீட்கும் சாக்கில்  ஃப்ரென்சு ராணுவப் படை உள்ளே நுழைந்து, மன்னனின் படையை வீழ்த்தியது. தோல்வியை மன்னன் ஏற்றதும்  மொராக்கோ ஃப்ரென்சு பாதுகாப்பின் கீழ் வந்தது. நாட்டை இழந்துவிட்டோமே என்று சுல்தான் அழுதாராம். அதைக்கண்டு  எரிச்சலுடன்  ‘பெண்ணைப்போல அழு, ஆணாய் லட்சணமாய் நாட்டைக் காப்பாற்றத்தெரியாமல்என்று அவருடைய தாய் கோபித்துக்கொண்டாள் என்று கதை உண்டு.
ஆனால் ஃப்ரென்சு அரசின்கீழ் காசப்ளாங்காவின் துறைமுகமும் தொழில்துறையும் முக்கியத்துவம் பெற்றன.  இப்பவும் கிராமப்பகுதியிலிருந்து மக்கள் நல்வாழ்வு தேடி காசப்ளாங்காவுக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். மொராக்கோவுக்கு 1956-ல் சுதந்திரம் கிடைத்து   மீண்டும் சுல்தான் ஆட்சி  ஏற்பட்டது. ஆனால் ஃப்ரென்சு மொழி இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. ஃப்ரென்சு மொழி தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்று  எங்களது கைட் சொன்னார்.

மூன்று மில்லியன் ஜனத்தொகை கொண்ட காசப்ளாங்கா இப்போது ஒரு பன்முகத்தன்மை உள்ள காஸ்மாபாலிட்டன்  நகரம். மொராக்கோவின்  மற்ற நகரங்களில் இல்லாத அளவுக்கு மேற்கத்திய நாகரிகம் உடையிலும் பாவனைகளிலும்தெரிகிறது. ஆண்களும் பெண்களும் உணவு விடுதிகளிலும் கடற்கரையிலும் ஜோடியாகக் காணப்படுகிறார்கள். 

 ரம்ஜான் நோன்பு முடிந்த நேரம். கொண்டாடப் படவேண்டிய புனித நேரம். மசூதியிலிருந்து  பிரார்த்தனைக்கான அழைப்பு அதிகாலை எல்லோரையும் தட்டி எழுப்புகிறது. மன்னன் ஹாசன் காசப்ளாங்காவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சின்னங்கள் இல்லாததை ஈடுகட்ட ஆசைப்பட்டிருக்கவேண்டும். மன்னனரின் பிரத்தியேக     எண்ணமாக  இந்த மசூதி  வடிவம் பெற்றது. அவரது 60-வது பிறந்தநாளை ஒட்டி ஆரம்பிக்கப்பட்டது. 1993ல் தான்  திறக்கப்பட்டது.   நவீன காசப்ளாங்காவில்  நம்பமுடியாத நுட்பமான புராதன வேலைப்பாடுகொண்டதாகப் பேசப்படும்    ஹாஸன் II  மசூதியைப் பார்க்க எல்லோரும் தயாரான சமயத்தில் எங்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கிறது. அன்று ஈத் பண்டிகை ஆதலால், மசூதி உள்ளூர் முஸ்லிம்களுக்கு மட்டுமே  திறந்திருக்கும்; வெளிப்பேருக்கு அனுமதி இல்லை என்று அறிந்தோம். 

நகரத்தின் பழைய [மெதினா] பகுதிகளைக் காணச் செல்லலாம் என்கிறார் கைட்.  நவீன நகரமான காசப்ளாங்காவில் வரலாற்றுப் பெருமை வாய்ந்த கட்டிடங்கள் இல்லை. அந்த பயங்கர பூகம்பத்தில் எல்லாம் அழிந்திருக்கவேண்டும்.  இருந்தும் மெதினா தெருக்களில் நடப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். துறைமுகத்தை ஒட்டிய அந்தப் பகுதியின் பழைய பாணி கட்டிடங்களும் குறுகலான சந்துகளும் காசப்ளாங்காவின் நவீன முகத்திலிருந்து வேறுபட்டதாக இருந்ததே ஒரு ரம்யமான சூழலை ஏற்படுத்திற்று. வாழ்வே ஒரு கொண்டாட்டம் எனும் கோலாகல உணர்வைக் கொடுத்தது அங்கிருந்த பேச்சின் சத்தமும் வியாபாரிகளின் இரைச்சலும் . பாதையோரக் கடைகளில் வண்ணமயமான பண்டங்கள் விரிந்திருந்தன. 

ரபாத்திலிருந்து கம்பள விரிப்புகள்; ஃபெஸ்ஸின் எம்ப்ராயிடெரி செய்யப்பட்ட ஆடைகள்; ஸாஃபித்தின் பீங்கான் பாத்திரங்கள், டாஞ்சியரின் வெள்ளி சாமான்கள் என்று கண்ணைக் கவரும் பண்டங்கள். மளிகைக்கடைகளில், வாதம் பருப்பும், உலர்ந்த திராட்சையும், பிஸ்தாவும், உலர்ந்த பேரீச்சம்  பழமும், நம்மூரில் பருப்பு வகைகள் திறந்த சாக்குப் பைகளில் போட்டு வைத்திருப்பதைப் போல வைக்கப் பட்டிருப்பது நமக்கு அதிசயமாக இருக்கிறது. விலையும் கொள்ளைமலிவாகத் தோன்ற, எல்லோரும் எல்லாவற்றையும் அள்ள விரைகிறோம். நாங்கள் வீதியில் நடக்கையில் சிறுவர்கள், ‘ஷாருக்கான், அமித்தாப் பச்சன்என்று சிரித்தபடி அழைக்கிறார்கள். 

மறுநாள் விடிந்ததிலிருந்து மழை கொட்டுகிறது. ஆனால் அன்று நாங்கள் ஹாசன் மசூதியைப் பார்த்தே ஆகவேண்டும். காமிரா வைத்திருந்தவர்கள் மழையை நொந்தபடிக் கிளம்பினோம். நுழை வாயிலுக்குச் செல்லும் நீண்ட பாதை சலவைக்கல்லால் ஆனது. மழையில் தலை நனைய காமிராவை  நனையாமல் போர்த்தியபடி  ஈரத்தில் வழுக்கும் சலவைக்கல்லின்மீது நடப்பது வேடிக்கை விஷயமல்ல. ஆனால் யார் செய்த புண்ணியத்திலோ நீங்கள் சறுக்கி விழாமல், இடுப்பு சேதமாகாமல் உள்ளே நுழைந்துவிட்டீர்களானால், ஒரு அற்புதத்திற்கு முன் நிற்பீர்கள். அங்கு செல்வதற்கு முன்பே அதன் ஆச்சரியமான பொறியியல் சாகசங்களைப் பற்றி  நான் படித்து வைத்திருந்தேன். கடலின் மேல்  எழும்புகிறது மசூதி. கடல் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பாறை அதன் அஸ்திவாரம். கடவுளின் அரியணை நீரின்மேல் கட்டப்பட்டதாகச் சொல்லும் குரானின் வாசகத்தைப் பின்பற்றும் வகையில் அமைந்த அதிசயம் . ஃப்ரென்சு கட்டிடக்கலை நிபுணர் மிஷேல் பின்ஸூ மசூதியை வடிவமைத்தார். 210மீட்டர் உயரம் கொண்ட அதன் கோபுரத்தின் உச்சியில்  ஒரு லேஸர் கிரணம் மெக்காவை நோக்கி இரவில் ஒளி பாய்ச்சும். ப்ரார்த்தனைக்கு விடுக்கப்படும் அதி நவீன ஹைடெக்  அழைப்புடன்  மசூதி முழுவதும் குளிர்பதன வசதியும், மின்சாரக் கதவுகளும் பின்னுக்கு நகரக்கூடிய கூரையும் , பிரார்த்தனைக்கூடத்தின்  ஒரு பகுதியில் கண்ணாடி தரையின் கீழ் தெரியும்  [மசூதியின் பாதத்தைக்கழுவும்] அட்லாண்டிக் கடலும் நம்பமுடியாத நினைத்துப் பார்க்கமுடியாத  விஞ்ஞான அதிசயங்கள். பிரார்த்தனைக்கூடத்துள் நுழைந்ததும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துபவை அதன் ப்ரும்மாண்டமும் அதில் காணப்படும் அற்புதமான வேலைப்பாடுகளும்.  அந்தக் கூடத்தில் 25,000 பேர் அமரலாம். மூச்சை இழுத்துப் பிடியுங்கள். மசூதிக்கு வெளியே உள்ள பிராக்காரத்தில் 80,000 பேர் அமரலாம். பிரார்த்தனைக் கூடத்தின் தரை முழுவதும் கம்பளம் விரித்தாற்போல மரத்தில் அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மசூதி கட்டப்பட்ட காலகட்டத்தில் 6000 மரபு சார்ந்த கட்டட கலைஞர்கள் பணி செய்தார்களாம். கட்ட அரை பில்லியன் டாலருக்கு மேல் செலவானதாகச் சொல்லப் படுகிறது. புராதனக் கலையும் நவீனக் கட்டிடக் கலையும் இப்படிக் கை கோர்த்து எங்கும் காணக்கிடைக்காது என்று பிரமிப்பை ஏற்படுத்தும்  பொறியியல் சாதனை இது. 

மொராக்கர்கள் இதைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுவதில் வியப்பில்லைதான். ஆனால் இதைக் கட்டுவதற்காக இங்கு முன்பு குடியிருந்த ஏழை மக்களை அப்புறப்படுத்தியபோது அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் முணுமுணுப்பும் இருப்பதாக எங்கள் கைட் மெல்லிய குரலில் சொன்னார்.       

ஆனால், மசூதியைச் சுற்றி வருகையில் அதன் விஸ்தீரணத்தையும் அழகையும், அதற்குப்பின் இருந்த கற்பனையின் வீச்சையும் எண்ணிப் பார்க்கையில் பிரமிப்பு மட்டுமே மனத்தில் நிலைக்கிறது. பக்தியின் வெளிப்பாடா, செல்வத்தின், அதிகாரத்தின் வெளிப்பாடா என்ற கேள்விக்கு அர்த்தமில்லை. தஞ்சை பெரிய கோவில் எதன் வெளிப்பாடு ? அதைப் போலத்தான் இந்த மசூதியும் என்று நான் நினைத்துக்கொண்டேன். காலத்தால் அழியாமல் ஒரு ஆயிரம் ஆண்டு நிற்குமானால் அது ஒரு மானுட சாதனை என்றுதான் கொள்ளவேண்டும். 

இந்த மாதிரி ஒரு மசூதியை நீங்கள் எங்கும் பார்க்கமுடியாதுஎன்று மிரியம் விடைபெறும்போது சொன்னாள். ‘ ‘முரண் இல்லாமல் பழமையும் புதுமையும் ஒன்றுசேரும் அதிசயம் அது”.  அவளது தலை முக்காடு கவனமாக அதன் இடத்தில் போர்த்தியிருந்தது. கூட்டத்தோடு அவள் கலந்து போனாள். 
காசப்ளாங்காவின் பாத்திரத்தன்மை அது என்று நான் நினைத்துக்கொண்டேன், அவளைப் போல.