Sunday 22 March 2015

எப்படிப் பிறக்கிறது கதை?




                         



எழுத்தாளர்கள் எப்படிக் கதை எழுதுகிறார்கள் என்கிற கேள்வி கதை பிறந்த காலத்திலிருந்து கேட்கப்படுவது. வாசகப் பாமரனின் பிரமிப்பு அதுவியாசர் உண்மையில் மகாபாரதத்தை எப்படி எழுதினாரோ என்னவோ, அதற்கும் விளக்கமாக ஒரு கதை உண்டு . வியாசர்  இடைவெளியில் நிறுத்தாமல் கதை சொல்வதற்குத் தயாரென்றால் எழுத நான் தயார் என்று   விநாயகர் வந்து அமர்ந்து தனது தந்தத்தை உடைத்து  எழுதியதாகப் புராணம். தெய்வீக அருள் இருந்தால்தான் அத்தகைய ஒரு முயற்சி சாத்தியம் என்று அர்த்தமாக இருக்கலாம். பல எழுத்தாளர்கள் கதை ஆரம்பிப்பதற்கு முன்னால் தாளில் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு நெருக்கமான  பிரபல மலையாள கிறித்துவ எழுத்தாளர் கதை ஆரம்பிப்பதற்கு  நல்ல நாள் பார்த்துத் தரச் சொல்வார். எனக்குப் பஞ்சாங்கம் பார்க்கத் தெரியாது. வீட்டில் எப்போதும் தினத்தந்தி தமிழ் காலண்டர் இருக்கும். அதில் இன்று சுப முஹூர்த்தம் என்றோ மரண யோகம் என்றோ இருக்கும். அதைப் பார்த்து அவருக்குத் தெரிவிப்பேன்மழை பெய்தாலும் நல்ல சகுனம் என்பார் அவர். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு பிரத்தியேக பழக்கமும் நம்பிக்கையும் இருக்கலாம். சிலர் சந்தை இரைச்சலுக்கு இடையிலும் எழுதமுடியும் என்பார்கள். எனக்கு சர்வ நிசப்தம் தேவை. ஏகாந்தமும் தேவை.

ஸாதத் ஹசன் மாண்டோ பாகிஸ்தானின் பிரபல உருது  சிறு கதை எழுத்தாளர் .[1912-1955] அவரது எழுத்தின் வசீகரம் மங்காத ஒன்று. அவரைப்போல வேறு எந்த உருது எழுத்தாளரும் அவரளவுக்குக் கொண்டாடப்பட்டவரும் இன்னமும்  கொண்டாடப்படுபவரும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருக்கமுடியாது.

அவரைச் சந்திக்க வரும் நிருபர்களும் வாசகர்களும் அவரை விடாமல் கேட்பார்கள் . எப்படி எழுதுகிறீர்கள்?’
அவர் ஒருமுறை ஒரு சொற்பொழிவில் விளக்கினார்.


நான் எப்படி கதை எழுதுகிறேன் என்று விளக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். இந்த எப்படிஎன்பது சங்கட மானது. நான் எப்படி எழுதுகிறேன் என்று என்னத்தை சொல்வதுஅது மிக யதார்த்தமான ஒரு விஷயம். எப்படி என்பதற்கு  என்ன சொல்லட்டும்என் அறையில் சோஃபாவில் அமர்ந்து ஒரு காகிதத்தாளையும் பேனாவையும் எடுத்து பிஸ்மில்லாஹ்என்று சொல்லிவிட்டு எழுத ஆரம்பிப்பேன் ..என்னைச் சுற்றிலும் எனது மூன்று பெண்களும் ஏகமாய் சத்தம் போட்டுக்கொண்டிருப்பார்கள். எழுதும்போது இடையில் அவர்களுடன் பேசுவேன். அவர்களது சண்டைகளைத் தீர்த்துவைப்பேன் . ஏதேனும் கொரிக்க எடுத்துவருவேன். நடுவில் யாரேனும் என்னை சந்திக்க வந்தால் அவரை உபசரிப்பேன். இதற்கிடையில் எல்லாம் நான் எனது கதையை எழுதுவதை நிறுத்துவதே இல்லை.

நான் எப்படித்தான் எழுதுகிறேன் என்கிற கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமென்றால் , எனது எழுத்துப்பாணிக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும்  அதாவது சாப்பிடுவது, குளிப்பது சிகரெட் பிடிப்பது அல்லது சும்மா இருப்பது போன்ற  விஷயங்களுக்கும் ஏதும் வித்தியாசமில்லை என்றுதான் நான் சொல்வேன்.
நீங்கள் சிறுகதை ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்பீர்கள் ஆனால், அதற்கு என்னிடம் விடை உண்டு.
நான் ஏன் எழுதுகிறேன் ? ஏன் என்றால் அது ஒரு போதை எனக்கு, மதுவின் போதையைப்போல. எழுதவில்லை என்றால் நான் நிர்வாணமாக இருப்பதுபோல , நீராடாமல் இருப்பதுபோல, மது அருந்தாததுபோல உணர்கிறேன். உண்மையில் நான் கதை எழுதுவதில்லை. அவை என்னை எழுதுகின்றன. நான் சுமாரான கல்வித் தகுதி உள்ளவன். இருபது புத்தகங்களுக்கு மேல் நான் எழுதி இருந்தாலும்அவை எல்லாம் எப்படி எழுதினேன் என்கிற பிரமிப்பு எனக்கு ஏற்படுகிறதுபல கதைகள் என்னை நீதி மன்றத்திற்கு இழுத்து ச் சென்றிருக்கின்றன.
எனது பேனா இல்லையென்றால், உருதுவோ பாரசிகமோ ஆங்கிலமோ ப்ரெஞ்சோ தெரியாத  வெறும் சாதத் ஹசன் தான் நான்.
கதைகள் எனது மனத்தில் உறைவதில்லை. எனக்குத் தெரியாமல் எனது சட்டைப் பையில் இருக்கின்றனஎவ்வளவோ முறை ஒரு கதை பிறக்காதா என்று தவித்திருக்கிறேன். ஒரு சிறுகதை எழுத்தாளனாக உருவாக, விடாமல் புகைப்பேன். ஆனால் ஒரு சிறுகதையையும்  என் மூளை உற்பத்தி செய்யாது. கர்ப்பமாக முடியாத பெண்ணைப்போல களைத்துப்படுப்பேன். ..எழுதாத கதைக்கு ஏற்கனவே சன்மானம் பெற்றுவிட்டதால்  எழுதப்படாத கதையை நினைத்துத் தவிக்கிறேன். எழுந்து பறவைகளுக்கு தீனி வைக்கிறேன். பெண்களை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டுகிறேன். இரைந்து கிடக்கும் காலணிகளை ஒழுங்காக அடுக்கிவைக்கிறேன். குப்பையை அள்ளி கொண்டுபோய் வைக்கிறேன். அந்தப் பாழாய்போன கதை என்னவோ பையிலிருந்து வெளியேறி என் மூளைக்குச் செல்லமாட்டேன் என்கிறது. என்னுடைய விரக்தி உச்சத்தை எட்டும்போது கழிப்பறைக்குச் செல்கிறேன். மகத்தான மனிதர்களுக்குக் கழிப்பறையில்தான் மகத்தான எண்ணங்கள் பிறந்திருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் நிச்சயமாக மகத்தான மனிதன் இல்லை. கழிப்பறையில்கூட எனக்கு சிந்திக்க வருவதில்லை. இருந்தும் நான் பாகிஸ்தானின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளன் என்று பெயர் வாங்கியிருக்கிறேன். விநோதம் இல்லை? ஒன்று, விமர்சகர்கள் எனது எழுத்தை அதீதமாகப் புகழ்ந்து ஒரு பிம்பத்தை எழுப்பியிருக்கிறார்கள். அல்லது எப்படியோ பட்டப்பகலில்  அவர்களை நான் பார்வையற்றவர்களாக்கி யிருக்கவேண்டும் அல்லது வசியம் செய்திருக்கவேண்டும்
மன்னியுங்கள் கழிப்பறைக்குச் செல்வது உண்மைதான். நிஜத்தைச் சொல்லவேண்டுமென்றால், இறைவன் முன்னிலையில் சொல்கிறேன், எப்படி எழுதுகிறேன் என்பது எனக்கு சத்தியமாகத் தெரியாது. யோசிக்கிறேன், யோசிக்கிறேன் எதுவும் எழுத வரவில்லை என்று மனைவியிடம் சொல்லும்போதெல்லாம், அவள், ‘யோசிக்காதே, சும்மா பேனாவையும் பேப்பரையும் எடுத்து எழுதி ஆரம்பிஎன்கிறாள்.

அவள் சொல்வதைக்கேட்டு நானும் பேனாவையும் தாளையும் எடுத்து காலி  மண் டையுடன், கதை நிறைந்த சட்டைப்பையுடனும்  எழுத அமர்வேன். திடீரென்று கதை ஒன்று தானாக வந்து நிற்கும்.
விஷயம் இதுவாக இருக்க நான் ஒரு சிறுகதைப் படைப்பவன் என்று சொல்லிக்கொள்ளமுடியாதவன். நான் ஒரு பிக்பாக்கெட் மட்டுமே. என்னுடைய பாக்கெட்டில் இருப்பதைத் திருடி உங்கள் முன் வைப்பவன். நீங்கள் உலகம் முழுவதும் பயணித்தாலும் என்னைப்போன்ற ஒரு முட்டாளைப் பார்க்கமுடியாது.

மாண்டோ சர்ச்சைக்குறிய எழுத்தாளராக இருந்தார். போலித்தனமான மதக்கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் வெளிப்படையாகத் தாக்கினார்ஆபாச எழுத்து என்று பல வழக்குகளில் சிக்கினார்என் எழுத்து ஆபாசமில்லை, ஆபாசம் இருப்பது சமூகத்தில் என்பார். ஒரு முறை நீதிபதியிடம், ‘தனது உணர்வுகள் புண்படுத்தப்படும் போதுதான் எழுத்தாளன் தனது பேனாவை எடுக்கிறான்.என்றார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகுப் பாகிஸ்தானில் குடியேறிய மாண்டோ பிரிவினை காலத்துக்கு முந்தைய பிந்தைய காலகட்டத்து துயரங்களைத் தனது கதைகளில் மிக நுணுக்கமாகப் பதிவுசெய்தவர். மிக மோசமான காலம் அதுஅந்நாட்களில் காண நேர்ந்த  மனித தார்மீகச்  சரிவு அவரை விரக்தி கொள்ளச் செய்தது. அதன் வெளிப்பாடு அவரது எழுத்தில் தெரிந்தது.    பிரிவினையால் நேர்ந்த அபத்தங்களை  அவை ஏற்படுத்திய மனப்பிறழ்வுகளை தோபா தேக் சிங் என்ற அவரது கதை அற்புதமாகப் படம் பிடிக்கிறது.

 அவர் தனது கல்லறையில் கீழ்கண்ட வாசகங்கள் எழுதப்படவேண்டும் என்று அறிவித்திருந்தார் :
கருணை நிறைந்த இறைவன் நாமத்தில்,
சாதத் ஹசன் மாண்டோ  இங்கு படுத்திருக்கிறான். அவனுடன்புதைந்திருக்கின்றன சிறுகதை எழுத்துக்கலையின் எல்லா ரகசியங்களும் மர்மங்களும்.
பல டன் கணக்கு மண்ணிற்கு அடியில் படுத்திருக்கிறான், இருவருக்கும் இடையில் யார் சிறந்த கதாசிரியன்  அவனா அல்லது இறைவனா என்கிற திகைப்பில்..


அந்தப் போட்டியில் தான் தோற்றுபோனதாக அவர் உண்ர்ந்திருக்கவேண்டும்.

2 comments:

  1. அருமை.....இந்திரன்

    ReplyDelete
  2. அருமை.....இந்திரன்

    ReplyDelete